தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம்

Thursday, June 17, 2010


சந்திரபோஸ் சுதாகர்

மழைக்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றத்தொடங்கியிருந்த ஒரு பிற்பகல் நேரத்தில் அவனை அவர்கள் கைது செய்தார்கள்.
சனநடமாட்டம் அதிகமாயிருந்த கடைத்தொகுதியின் மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் புழுக்களைப் போல மிகமிக அற்பத்தனமாக அந்த நிகழ்வு நடந்தது.
கண்களின் மீது இருளடைந்த தெருக்கள் ஊர்ந்தன. மனசிலிருந்த ஓவியங்கள் சிதைந்து போயிற்று. குருதியும் தசையும் மண்டிய புதிய ஓவியங்கள் அவனுள்; தொங்கின. மழை தூறத்தொடங்கிவிட்டது.
கடைத்தொகுதியின் இரண்டு பக்க வாயில்களையும் ஒரு வித கட்டளைக்கு கீழிப்படிகின்றவர்களைப் போல அல்லது அவர்கள் தாங்களே அவற்றைப் பிறப்பித்தவர்கள் போல தங்களால் அடைத்துக் கொண்டு நின்றார்கள்.
வெளியே சூழல் கல்லாயிற்று. யாருடைய பணிகளையும் யாரையும் செய்ய அவர்கள் அனுமதிக்கவில்லை. குழந்தைகளுக்குப் பொம்மைகளை அனுமதிக்காததைப் போல எல்லாவற்றையும் அவர்கள் நிராகரித்தனர். கண்ணுக்குத் தெரியாத வலை ஒன்று இந்த மாலை நேரத்தில் அந்த நகரத்தின் மேலே எறியப்பட்டுவிட்டதை அவன் உணர்ந்தான். குழந்தைகளோ அவர்களுடைய பொம்மைகளோ கூட அந்த வலையிலிருந்து தப்பமுடியாது. பழைய இருளடைந்த தெருக்களின் மேலே காகங்கள் சிறகுகளை ஒடுக்கியபடி பறந்துபோயின.
படிகளின் வசீகரத்தில் சிதறிக்கிடந்த வெற்றிலைக் கறையும் கழிவுகளின் நாற்றமும் இன்னும் அதிகமாய் பீதி கொள்ளச்செய்தது.
இரண்டு வெற்றுத்தாள்களையும் கொஞ்சம் சில்லறைகளையும் ஏனையவற்றையும் கொண்டிருந்த காற்சட்டைப்பையிலிருந்து சகலவற்றையும் வெளியிலெடுக்குமாறு அவனை அவர்கள் நிர்ப்பந்தித்தார்கள். கொஞ்சநேரத்தில் அதற்கு அவசியமற்ற வகையில் ஏழெட்டுப் பேர் அவனைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளால் நிரவினார்கள். எல்லோருடைய கேள்வியும் ஒரேவிதமாக வேறு வேறு வடிவங்களாக இருந்தன.
முரட்டுத்தனமான ஈவிரக்கமற்ற அவர்களது கண்களில் ஒரு மிருகத்தின் மீது பாய்வற்கான வெறி பின்னிக்கொண்டிருந்தது. அவர்களுடைய விரல் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் அவனது உயிருக்கு இனி எப்போதுமே அவன் சொந்தக்காரனாய் இருக்கமுடியாதென்பதை, அதற்கான அருகதை கொஞ்சம் கூட அவனுக்கு இல்லையென்பதை, அவர்கள் கல்லாகிக் கிடந்த அந்தப் பொழுதில் எழுதிவிட்டார்கள்.
காலத்தின் மீது சுற்றி இடப்பட்ட வளையம், தகர்த்து வெளியேற முடியாத படி அவனது குரல் வளையில் நெரித்தது. எல்லாம் முடிந்ததான ஒரு வெறுமை அவனுக்கு முன்னேயும் பினனேயும் படிகளில் ஏறியிருந்தது.
மழை தவிர மற்ற எல்லாமே செத்துப்போயிருந்த அந்த இருபது நிமிட நேரத்தில் நேரம் நகர்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் பேசியதில் பாதிக்கு மேல் புரிந்துகொள்ளக்கூடியதாயிருந்தாலும், இனி அதில் எவ்வித பலனும் இல்லையென்பதை அவன் நன்கே உணர்ந்திருந்தான். அதனால் அவன்; குறித்த அவர்களது மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ இல்லை. அல்லது அவர்களது தோள்களில் தொங்கிக் கொண்டிருந்த ஆயுதத்தின் மீதும் கோபத்திலும் வெறித்தனத்திலும் சிவப்பேறிய அவர்களது கண்களின் மீதும் அவர்களது வார்த்தைகளனைத்தும் கட்டுண்டு போயின.
நத்தையைக் கவ்விக்கொண்டு போகும் செண்பகத்தை ஞாபகப்படுத்தியது அவர்களின் செயல்கள் அனைத்தும்: முரட்டுப் பச்சைத்துணிகளால் மூடியிருந்த அவர்களது இதயத்திலிருந்து என்ன விதமான ஒலிகள் எழுகின்றன என்பது குறித்துக் கண்டுபிடிக்க முயன்றான்.
கடைசியில் எல்லா முயற்சியிலும் தோற்றுப்போய், காற்சட்டைப் பையிலிருந்த அவர்கள் ஏற்கனவே பார்க்க விரும்பிய சகலவற்றையும் பரிசோதிக்க அனுமதியளிக்க வேண்டி ஏற்பட்டது. சோர்ந்து போன அல்லது பசியில் நடுங்கிக் கொண்டிருக்கும் கந்தைத் துணிகளால்கட்டி நிறுத்தியிருக்கும் உடலமைப்பைக் கொண்டிருந்த ஒரு மனிதனிடம் அவர்கள் தேடும் எதுவும் இருக்காதென நன்கே தெரிந்திருந்தாலும் பழக்கதோஷத்துடன் கூடிய அவதானத்துடன் அவர்கள் அதனைச் செய்தார்கள்.
அவன் அந்த நகரத்துக்கு வந்த இருபத்து மூன்றாம்நாள் முன்னெச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையீனத்தால் முழுவதும் பீடிக்கப்பட்டிருந்தபோது சீலனுக்கு எழுதிய கடிதத்தை, காற்சட்டையின் பின்பக்கப் பையிலிருந்து மடிப்புக்களிடையே சொற்கள் கிழிந்துதொங்கக் கண்டெடுத்தார்கள்.

ii

மண் கரைந்த தடங்களை அழித்தபடி மழை, காலத்தின் மீது சவுக்காய் விழுந்துகொண்டிருக்கிறது.

iii

நகரின் மத்தியில் மிக உயர்ந்த கூம்புவடிவச் சுவரிலிருந்த நான்கு மணிக்கூடுகளில் ஒன்று கூட மிகச்சரியாக இயங்கவில்லை என்பதை மழைப்புகாரினூடே ஏதோ கெட்ட கனவொன்றைப் போல அவன் கண்டான். கோபுரத்துக்கு இன்று காலையில்தான் வெண்ணிற வர்ணத்தைப் பூசியிருந்தார்கள். வர்ணம் சுவருடன் காய்வதற்கு முன்னர் எல்லாவற்றையும் மழை கரைத்துப்போயிற்று. அவனைச் சூழ நிலவிய சாபத்தின் நிழல் வர்ணங் கலைந்த கோபுரத்தின் மீதும் படர்ந்திருப்பதை ஒரு வித நடுக்கத்துடன் அவதானித்தான்.
இப்படித்தான் மிகக்குறைந்தது ஐந்து வருடத்துக்கு ஒருமுறையாவது வர்ணம் பூசு யாராவது வந்து விடுகின்றார்களென்றும் ஒவ்வொரு தடவையும் மழையோ புழுதியோ அல்லது குறையோ எல்லாவற்றையும் கரைத்தழித்து கோபுரத்தின் சுயசொரூபத்தை மக்களின் காட்சிக்கு – எப்போதுமே மிகச்சரியாக இயங்காத பெண்டுலங்களுடன் விட்டுச்சென்று விடுகின்றன என்றும் இதே தெருவில், காலையில் தான் யாரோ பேசிக்கொண்டு போனதைக் கேட்டான்.
ஆர்வ மேலீட்டால் எதன்பொருட்டுமற்று அப்பேச்சை அப்போது கேட்க வேண்டியிருந்தது. எந்த வகையிலும் அவசியமானதாயிருக்கவில்லை. எனினும், அவர்கள் பேசியதை – அவர்கள் பேசியதன் சாரத்தை இப்போது நினைவு கூர்ந்தான். நேரத்தை இந்த இந்த மரண அவஸ்தையிலிருந்து மீட்கும் பொருட்டு கோபுரத்தினடியில் மாடுகள் சாணமிடுகின்றன. இரவு சலசலக்க கோபுரத்தினடியை மூத்திர நாற்றத்தால் நிறைக்கின்றன. சிலவேளை இவை எதுவுமே நிகழாவிட்டால் ஒரு கழுதையாவது தனது நாக்கால் நக்கி நக்கி வர்ணத்தை தின்றழித்து விடுகிறது. மீண்டும் வர்ணமடிப்போர் வருகிறார்கள் கோபுர முகட்டின் அடுக்குகளிலிருந்து புறாக்களை விரட்டுகிறார்கள். கூடுகளை விட்டுப்பறந்துபோன புறாக்கள் திசைக்கொன்றாய் மீண்டும் கூடு திரும்ப இயலா ஏக்கத்துடன் பறந்து போகின்றன, இனியற்று.
கோபுரத்தின் நிழலில் ப+சிய வர்ணங்களில், எல்லோரும் கண்ட சீராக ஓடும் பெண்டுலம் பற்றிய கனவு கடைசிவரை பலிக்கவேயில்லை யாருடைய இரவுகளிலும்.
மழையின் இருளிலும் சூரியன் மங்கிப்போன வெறுமையிலும் நேரத்தை ஊகிக்கும் முயற்சிகூடப் பயனற்றதாயிற்று.
சுடுகாட்டு நிறத்தாலான அப்பொழுதில், ஆச்சரியப்படும் வகையில் சீலனுக்காக அவன் எழுதிய கடிதத்தை அவர்களில் ஒருவன்; உரத்துப்படித்தான்.
அது உண்மையில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஏனெனில் இதுவரை, இந்த மூன்று மணி நேரத்தில் நகரின் ஜீவனையே இரண்டு விரல்களில் துப்பாக்கியின் நுனியில் அருவருக்கத்தக்க வகையில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் இவர்களில் ஒருவன் கூட அவனுடைய மொழியில் அவனை விசாரணை செய்யவில்லை என்பதை விட முக்கியமானது ஒருவனுடைய அந்தரங்கத்தில் எந்தக் கூச்சமும் வெட்கமும் பயமுமின்றி வெகுசாதாரணமாய் அவர்கள் நுழைத்துவிட்ட காடைத்தனம் தான்.
கடிதத்தைப் படித்துக்கொண்டிருப்பவனுக்கு முன்னர் தான் அதில் என்ன எழுதினான் என்பதை ஞாபகப்படுத்தும் அவசியம் மிகமிக முக்கியமானதாயிற்று இப்போது.
இப்படித்தான் இவையெல்லாம் நிகழ்ந்ததைப்போல எந்த முன்னறிவிப்புமின்றி இக்கடிதமும் எப்போதோ எழுதப்பட்டது.
சீலன், சமரசங்களுடன் வாழ்தல் பற்றிய எல்லாக் கோட்பாடுகளையும் தகர்த்துவிட்டு ஒரு கூட்டிலிருந்து தப்பிவந்து இன்னொரு சிறையில் வீழ்ந்துவிட்டதாகவே எண்ண வைக்கிறது இன்றைய வாழ்க்கை.
எந்த நம்பிக்கையில் நான் இந்த நகரத்துக்கு வந்தடைந்தேன். நிச்சயமற்ற எதிர்காலத்தின் பிரஜையான உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்ன மதிப்பிருக்கிறது இங்கே?
ஓடுகின்ற புகைவண்டியின் இரைச்சலாக அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன செண்பகத்தின் கண்கள்: அவற்றிலிருந்து தப்பித்து எந்தத் தெருவில் ஓடுவது? எந்தத் தெருவிற்கு எந்த முகம்? அல்லது எந்த உடலுக்கு? எங்களால் இனங்காண முடியாதிருப்பது எதன் நிமித்தம்? எல்லா இடங்களிலும் குப்பைத்தொட்டிகள் இருக்கின்றன. யாருமே குப்பைகளைத் தொட்டிகளில் எறிவதில்லை. நாங்களோ ஒருவித ஆற்றாமையுடன் நூறு வீதமும் புனிதத்தை விரும்புகிறோம்: எதிர்பார்க்கிறோம். இந்தச் சாத்தியமற்ற எதிர்பார்ப்பு எமது வாழ்வின் மீதே திரும்பிவிடுகிறது முள்ளாக.
இந்த வேதனையிலும் துயரிலும் யாருக்குத்தான் தெரிகிறது முட்கள் குத்தும்வரை குத்தும் என்று.
1999.08.24 செவ்வாய்க்கிழமை
நீ அவசியம் பார்க்க வேண்டிய நாட்குறிப்பின் ஒரு பகுதி:-
‘சே’ வந்திருந்தான். இன்று பிறந்த நாளாம். நான் நினைக்கிறேன் இது அவனது இருபத்து மூன்றாவது பிறந்த நாளாக இருக்கலாம். அவனுக்கு கொடுப்பதற்காக என்னிடம் எதுவுமே இருக்கவில்லை. நான் இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை. நேரம் 11:38 மதியமாவதற்றுச் சற்றுமுன் - டைத் தாண்டிவிட்டது.
நான்கு பக்கமும் கழிந்த – கயிற்றால் நன்கு பிணைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியிலிருந்த – அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்த ஒரே பொருள்அதுதான் - புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருக்கிறான். கனமான இறுக்கம். அறைமுழுக்கப்பரவியிருந்தது – நான் எழுதுகிறேன் - நீண்ட நேரத்துக்குப்பிறகு சோர்ந்து களைத்துப்போய் அவன் இந்த அறைக்குள் வந்ததிலிருந்து மூன்றாவது வார்த்தையைப் பேசினான். இதற்கு முன் நான் அவனை இப்படிப் பார்த்ததேயில்லை – சாரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே தேநீர் அருந்துவதற்கான பணம் கூட அவனிடமில்லை. ஊரிலேயே இருந்திருக்கலாம் என்று சொன்னான். நான் அதை எப்போதோ உணர்ந்து விட்டேன். பசியும் வீதிகளில் இறங்கப் பயமுமாய் இந்தக்காலம் கழிகிறது. பின்னேரம் அவன் போய் கொஞ்ச நேரத்தில் எதுவுமே எழுத மனமற்று வெறுந்தரையில் படுத்துக்கிடந்தேன். இன்று முழுவதும் நாங்கள் சாப்பிடவில்லை. முகட்டு வளைக்குள்ளிருந்து ப+னை ஒன்று எதையோ வெறித்துக்கொண்டிருக்கிறது. எலி பற்றிய அதன் நம்பிக்கையோடு.
o
‘சே’யை அவர்கள் கைது செய்துவிட்டார்கள். சரியாக ஞாபகமில்லாத ஒரு திகதியில். மூன்று மணிக்கும் 3.15க்குமிடையில் ஊர் பற்றிய ஞாபகங்களோடு கடற்கரையின் உப்புக்கசியும் மணலில் உட்கார்ந்திருந்தபோது அல்லது கடலின் முடிவற்ற நீட்சி பற்றிய பிரமையில் மனம் வசமற்றிருந்தபோது இது நடந்தது. நான் கவனித்தேன். அவனை அந்த மணலில் இழுத்துச் சென்றபோது எல்லோருடைய கண்களும் செண்பகத்தின் கண்களையே பெரிதும் ஒத்திருந்தன.
சீலன், நாங்கள் மிகமிகச் சாதாரணர்களாகவே இருந்திருக்கிறோம். உழைத்துச் சாப்பிட்;டு தூங்கிப்பின் சாப்பிட்டு…. இப்படியிருந்த எங்களுக்கு அவர்களோ கண்ணீரைப் பரிசளித்தார்கள். சாவையும் அழிவையும் துயரையும் பரிசளித்தார்கள். இருப்பழித்து வீதிகளில் அலைய வைத்தார்கள். திக்கற்றலைந்து அவர்களில் விழுந்த எங்களை விலங்குகளைப்போல இழுத்துச் சென்று சிறைகளில் அடைத்தார்கள்.
‘சே’ என்ற வறுமையிலும் துயரிலும் மெலிவுற்ற ஆனால் கனவுகளால் உறைந்து போயிருந்த எங்களது நண்பனுக்கு சிறிதும் பொருத்தமற்ற உடற்தோற்றத்தில் நாங்கள் கூட்டிய அந்தப் பெயர் எப்போதும் போல துரதிஷ்டம் மிக்கதாகவே ஆகிவிட்டது இப்போதும்.
அவன் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தரிசான வயல் வெளிகளில் நீர் வறண்ட ஆற்று மணலில் - எனினும் எப்போதாவது வரும் என எதிர்பார்க்கப்பட்ட நீர் பற்றிய கனவுகளோடு குண்டுச்சத்தங்களால் துரத்தப்பட்ட போதும், ஊரின் பழந்தெருக்களில் நடந்து போவதான பிரமையுடன் மிக மெதுதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் நீண்ட இடைவெளியை அனுமதித்து சொல்லிக்கொண்டிருந்தான். இடையே கடல் பற்றியும் பேசியிருக்க வேண்டும். அவனுடைய இதயத்திலிருந்து அந்தப் பிரமைகள் வடிந்தடங்கு முன்னரே அவனை அவர்கள் இழுத்துச் சென்று விட்டார்கள்.
சீலன், இது நிகழ்ந்ததற்கான பிரத்தியேக காரணங்கள் எதுவும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. அவன் தனது அந்திம காலத்தில் - அவனைப் பொறுத்தவரையில் இது ஒரு வகையில் அந்திம காலமாகவே இருந்தது – அநேகமான பொழுதுகளை என்னுடைன்தான் கழித்தான் என்பதால் எனக்குத் தெரிந்து இக்காலத்தில் அவன் செய்த இரண்டே குற்றங்கள், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததும் - உண்மையில் அவன் அதைக் கொடுக்கவில்லையே தவிர, அதன் வேதனையாலும் அவமானத்தாலும் குறுகிப் போனான் - நூலகங்களிலிருந்து இதுவரை மூன்று நூல்களைத் திருடியதும் தான்.
ஒரே பிரயாணப் பையுடன் இந்த நகரத்தை வந்தடைந்த எங்களை மிருகங்களைப் போல தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்த இருபத்திநான்கு மணிநேரத்தில் 23 1ஃ4 மணி நேரத்தை தூக்கத்துக்கோ ஏனைய மிகவும் அவசியமான தேவைகளுக்கோஅனுமதியளிக்காமல் இரண்டு மாதத்துக்குப்பின்னர் மிக மோசமான விசாரணையின் முடிவில் நாங்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டோமெனினும், நூலகப் பத்திரத்தில் கையொப்பமிடக்கூடிய தெரிந்த மனிதர்கள் யாரும் எங்களுக்கு இருக்கவில்லை. இதனைக் காரணமாக்கி அவனுக்கான நூலக அனுமதியை வன்மையாக மறுத்துவிட்டனர் அது சார்ந்த அதிகாரிகள்.
அவன் புத்தகங்களை திருடிக்கொண்டு வெளியேறிய எச்சந்தர்ப்பத்திலும் யாரிடமும்அகப்படவில்லை என்றும் மாறாக, தான் திருடிய புத்தகங்கள் அனைத்தும் தடித்த தூசுப்படலம் நிரமிபியதாக இருந்தும் ஒரு வகையில் இப்போதைக்கு யாரும் அவற்றைத் தேடப்போவதில்லை என்ற நம்பிக்கையைத் தருவதாகவும் என்னிடம் அவன் பல தடவைகள் சொல்லியிருக்கிறான்.
இப்படியிருக்க இந்த இரண்டு குற்றங்களுக்காகவுமா அவனை அவர்கள் நாயை இழுத்துச் செல்’வதைப்போல இழுத்துச் சென்றார்கள்.
எனினும் நான் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிடவில்லை. நிச்சயம் அவன் எங்களை மீண்டும் எப்போதாவது சந்திப்பான். ஒன்றில் சித்திரவதை செய்யப்பட்ட, விரல்ககள் பிடுங்கப்பட்ட, மொட்டையடிக்கப்பட்ட தலையோடு அல்லது பிணச்செய்தியாக. என்னதானிருந்தாலும் நாங்களும் அவனைச் சந்தித்தேயாக வேண்டும். ஏனெனில், அவன் உழைத்ததையும் சாப்பிட்டதையும் போக பட்டினி கிடந்த காலங்களே அதிகம்.
o

1999.06.12 திங்கட்கிழமை இரவு ஒரு மணிக்கு மேல் எழுதிய நாட்குறிப்பு.
நந்தாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அவள் ஏற்கனவே மூன்று வருடங்களிற்கு முன்ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானவள் என்றும் அப்போது அவள் கணவன் கூடவே இருந்தான் என்றும் சாப்பாட்டுத் தட்டுக்களுடன் கூடியிருந்த நீண்ட வரிசையில்எனக்குப் பின்னே கேட்டது. இப்போது மட்டுமல்லஅவள் அந்த முகாமில்அடைக்கப்பட்ட சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகஅவளும் அவளது மூத்த குழந்தையும்தங்கள் எதிர்காலத்திற்காக நம்பியிருந்த பாதுகாவலனைச் சந்திக்கவேயில்லை என்பது உட்பட வறுமையிலும் நோயிலும் கறுத்துச் சுரண்டிருந்த இப்போது பிறந்திருக்கும் பெண் குழந்தைக்க தகப்பனான 17 வயதே நிரம்பிய சரசுவின் காதலன் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கிணற்றடியில் பெண்கள் குளிக்கமுடீயாதபடி அது திறந்து வெளியாயிருக்கிறது: இராணுவத்தினர் தமதுபச்சை உடுப்புக்களுக்கு மேலாய் செண்பகக் கண்களுக்கு மேலாய் சுடுவிரல்களின் மேலாய் அவர்களை இம்சிக்கிறார்கள்.
ஆண்களை அனுப்பி சிகரெட் பெட்டியும் லைட்டரும் சிவப்பு முத்திரைப் பழைய சாராயமும் வாங்கிவரப்பணிக்கிறார்கள். எல்லாம் திட்டமிட்டபடி. அவர்கள் முகாம்களிலும் வீதிகளிலும் மிருகங்களை ஞாபகப்படுத்தியபடி அலைந்து திரிகிறார்கள். நீயே சொல் மனிதன் தான் மிருகம் எனக்கருதும் - தீங்கு செய்யும்எந்த ஜந்துவிடமாவது ஆத்திரம் கொள்ளாமலிருக்க முடியுமா?இது நான் சொல்வதை நீ எவ்வாறு புரிந்து கொள்கிறாய் என்பதைப் பொறுத்ததெனினும் தயவுசெய்து கேள்.
அதிகாரம் தனது இருதயத்தாலல்ல துப்பாக்கிகளாலும் தோட்டாக்களாலும் தன்னை முண்டு கொடுத்து வைத்திருக்கிறது. அது அவற்றை இழக்கும் வரை - இந்த இழப்பு என்பது எப்போதும் அவர்களால் பாழில் வீழ்த்தப்பட்ட மனிதர்களைப் பொறுத்த விசயமாகவே இருந்து வருகிறதெனினும் - நாடோடி மனித வாழ்வும் அப்பாக்களில்லாத இரண்டு அப்பாக்களை உடைய குழந்தைகளும் யாருமற்ற குழந்தைகளும் சிறையும் சித்திரவதையும் சாவும் பீதியும் தவிர்க்க முடியாததாகி விடும்.
இன்றைய நடுங்கும் இரவில் எல்லோரும் தீ மூட்டுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். தீ தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இப்போது எல்லோர் மனங்களிலும்.

iv
கடிதம் இப்படி இடையிலேயே நின்றுவிடும் என்று அவர்களில் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடிதத்தில் திகதியிடப்படவில்லை. கையொப்பமே கூட இருக்கவில்லை. சிலவேளை எழுதுவதற்கு இன்னும் நிறைய விடயங்கள் இருந்திருக்கலாம். எதன் பொருட்டோ அது முடிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் கொண்டிருக்கவில்லை.
மழை, சூழலில் நிலவியிருந்தகல்லின் மீது அதுவும் ஒரு கல்லாய் விழுந்து தெறித்தது. மிகப் பயங்கரமான ஜந்துவைக் கண்டுவிட்டதான நடுக்கம் கடிதத்தின் மீதிருந்து அகலாத அவர்களின் கண்களில் ஊர்ந்ததை அவன் உணர்ந்தான்.
இவ்வாறானதொரு குற்றச்சாட்டில் தான் கைதுசெய்யப்படப்போவது தவிர்க்க முடியாதென்று நினைக்குமளவிற்கு அவர்கள் எல்லோரதும் முகங்களும் மாறிப்போயின.
தான் நின்றிருந்த சூழலைக் கடந்துவீதியைத் தாண்டி வலையில் அகப்பட்ட எல்லாவற்றையும் மீறி அவனுடைய பார்வை, புறாக்கள் பறந்துபோன, கடந்த சில மணிகளின் முன்னர் தான் வெள்ளையடிக்கப்பட்ட எப்போதுமே மிகச்சரியாக அல்லது அண்ணளவாகவேனும் இயங்காத கோபுரத்திலிருந்த மணிக்கூட்டின் மீது வீழ்ந்ததை அவனால் தவிர்க்கவே முடியவில்லை.
கணத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி, திடீரென் அவன் மீது விழுந்த வலி எதன் பொருட்டு நிகழ்ந்ததென உணரும் சக்தி அதே வலியால் நிராகரிக்கப்பட்டது.
‘சே’யை இழுத்துச் சென்றதைப் போல, அவனை அவர்கள் இழுத்துச் சென்றார்கள்.
தெருவில் இறங்கியபோது, ஈக்களும் குட்டையும் நிறைந்த வலியாலான நாயொன்று இன்னொரு நாயை துரத்திக் கொண்டிருப்பதை அவன் கண்டான். ஒரு சந்தர்ப்பத்தில் துரத்தப்பட்ட நாய் வெறுமனே வந்து கொண்டிருந்த வேறு நாயொன்றைத் துரத்தத் தொடங்கியது. வீதி முழுக்கப் படர்ந்து போயிருந்த அவனது கண்களின் நிழலில் நூறு நாய்களின் கூட்டம் சொல்லிலடங்கா அருவருப்புடன் ஆனால் வெறியுடன் பிறாண்டிக்கொண்டிருந்தது. வாழ்வின் எல்லாத் தகுதிகளையும் நிராகரித்து.
o

0 comments: