தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

அரசனும் குதிரைவீரனும் அழியுங்காலத்தின் சனங்களும்

Friday, August 13, 2010



சித்தாந்தன்

பாழடைந்த நூலகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருந்தான். புதர்களும் குப்பைகளுமாக சிதறிக்கிடக்கும்; அந்த இடத்தில் சற்றுக்கு முன்புதான் மௌனம் கலையாமல் மரத்தின்கிளைகள் சலசலக்க அந்தப் பட்ஷி பறந்திருந்தது. அவன் நூலகத்தைப் பார்த்தான் புராதன சுவர்களில் எண்ணற்ற வெடிப்புக்களிடையே பசுமை படர்ந்திருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்டுவிடத்தவறும்
ஓவியங்கள் சுவர்களில் மறைந்திருந்தன.
ஏராளமான காலடிகளின் ஓசை படிக்கட்டுக்களில் கேட்டுக் கொண்டிருந்தது. யார் வருகிறார்கள்? அவன் திரும்பிப் பார்த்தான் எவருமேயில்லை. ஆனாலும் இடைவிடாத ஓசை கேட்டபடியிருந்தது. அவன் மேலேறிச் சென்றான். புத்தகங்கள் எங்கும் சிதறிக்கிடந்தன. தாள்கள் காற்றில் எழுந்து பறந்தபடியிருந்தன. யாரோ வாசிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. அவனின் மௌனத்தை விட்டத்தில் தொங்கவிட்டு சவுக்கால் அடிப்பது போன்ற பிரமையை உணர்ந்தான். யாருமில்லாத நூலகத்தில் யாரேனும் எப்போதுமிருந்து கொண்டுதானிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டான்.
நேரம் நடுப்பகலைத் தொட்டுக் கொண்டிருந்தது. இத்தோடு அவன் இந்த நூலகத்திற்கு நூறாவதோ அல்லது நூற்றியோராவது தடவையோ வருகின்றான். நூலகத்தின் சுவர்களின் வெண்ணிறம் உதிராத நாட்களில் அவனது அநேக பொழுதுகள் இதனுள்த்தான் கழிந்தன . இப்போது பழுப்பேறிய சுவர்களில் வேர் விட்டிருக்கும் மரங்களும் திறந்துகிடக்கும் கதவுகளும் கூரைகளும் மனதை என்னவோ செய்வது போலிருந்தன.

நூலகத்தின் வரைபடம்-1
கனவுகளின் தொலைவின் நீளமும் நினைவுகளின் எல்லை அகலமும் கொண்டது நூலகத்தின் வளவு. பிரதான வீதிகள் குறுக்கிடும் சந்தியில் வெண்ணிற மாளிகையாய் விளங்கியது. போகவும் வரவும் வேறுவேறான பாதைகள். பிரதான வாயிலின் அருகே நீர்க்குழாய். பின்புற வாயிலை அண்டியதாக மலசல கூடம் .காற்று எல்லாப் பொழுதுகளிலும் சுதந்திரமாக வீசியபடியிருந்தது.
00
அவன் அவசரமாக புத்தகங்களையும் கிழிந்த தாள்களையும் பொறுக்கினான். பரிச்சயமற்ற புத்தகங்களின் எண்ணற்ற பக்கங்களையும் சேகரித்தான். இப்போது நேரம் நடுப்பகலைத் தாண்டியிருந்தது. உதிரியாகக்கிடந்த தாள்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினான். மிகப்பெரும் புத்தகமாக அது இருந்தது.
வாசிப்பு-1
சற்றும் தளராத அரசன் வென்ற நகரங்களைக் கணக்கிட்டபடியே வந்தான். கருமை மூடிய வனங்களையும் எரிந்து கருகிய நிலங்களையும் அவன் கண்டு கொள்ளவில்லை. மிருகங்களையும் பறவைகளையும் கூவியழைத்தான். திசைகள் எட்டல்ல பதினாறு எனச் சத்தமிட்டான். புரவிகளின் குழம்பொலி கலையாத தெருவில் அவன் கம்பீரமாக சென்று கொண்டிருந்தான். மண்மேடான குடிசைகளைக் கணக்கிடத் தவறினான்.

மறுவாசிப்பு-1
எப்போதும் சனங்கள் விரட்டப்பட்டபடிதானிருக்கிறார்கள். விரட்டுபவர்களின் முகங்கள் மாறுகின்ற போதும் குணங்கள் மாறுவதில்லை. ஒடுங்கிய குவளைக்குள் தகித்துகொண்டிருக்ககும் மதுவைப் பருகியபடி அரசன் சொல்கின்றான் “சிறகுகளில்லாத ஒருவன் தேவதை தன் கனவுகளைக் குடிப்பதாய்”. சிதிலமான நிலங்களின் வரைபடங்களின் மீது வழிந்து சிதறிய அதன் வீணீரைத் தன் உள்ளங்கையால் துடைத்தவாறு அரசன் மீண்டும் மதுவைப் பருகினான். தான் பார்த்து வந்த தெருக்களின் மாமிச வாடையை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்து சுவாசப்பையை நிறைத்தான். அதன் மணத்தில் திளைத்தவாறே உறங்கினான்.

நூலகத்தின் வரைபடம்-2
கிளைக்குறிப்பு
தொலைவில் சடைத்த மரங்களிடையே வெண்கோபுரமாய்த் தெரிகிறதே அதுதான் நூலகம். படியேறி உட்சுவர்களைப் பார்க்கிறவர்கள் உணர முடிவதெல்லாம் இது ஒரு காலத்தில் நூலகமாய் இருந்தது என்பதைத்தான். சுவர் முழுவதும் ஆபாசக் குறிப்புகளும் படங்களும் வரையப்பட்டிருக்கின்றன. வரைபவர்கள் கரிகளால் வரைந்திருக்கிறார்கள். கரி பிரண்ட கைகளால் அவற்றைத் தழுவியுமிருக்கிறார்கள்.
00
அவன் புத்தகத்தை வாசித்தபடியேயிருந்தான். தாள்களின் கனம் வற்றிக் கொண்டேயிருந்தது. ஆனால் கதையோ எல்லையற்று விரிந்தபடியிருந்தது. அவன் சலிப்படையவில்லை. வாசிப்பின் வெளி விரிய கடலளவு கதைகளுக்குள் இறங்கி மூச்சுத் திணறியவாறிருந்தான்.

வாசிப்பு-2சாகாவரங்களால் புனையப்பட்டவனின் புரவிகள் கால் மடங்கின. ஆரணியம் எரிந்து கொண்டிருந்தபோது சாகசங்கள் மட்டுமே புகையாய் எழுந்து வானத்தை மூடின. சனங்கள் தண்ணீருக்காக அலைந்துகொண்டிருந்தனர். தானியக்களஞ்சியங்களை வெம்மை தின்று கொண்டிருந்தது.ஒவ்வொரு இரவுகளையும் ஓராயிரம் யுகங்களால் சனங்கள் தாண்டினார்கள். பசித்த வயிறுகளை வானம் நோக்கிக் குவித்திருந்தவர்களின் வாய்களில் தணல் மழை பொழியத் தொடங்கியது. சனங்கள் பெயர்ந்து கொண்டேயிருந்தார்கள். கூடாரங்களைக் காவியவாறே சொற்ப நாட்களில் கணக்கிட முடியாத் தூரங்களைக் கடந்தார்கள். ஆறுகள் வற்றின குளங்கள் பொருக்குலர்ந்தன.

குறுக்கீடு
(குரல்வளையில் கத்தி வைக்கப்பட்ட இருவர் தெருமுனையில் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்)

அருவம்- நகரத்தைப் பார்த்தாயா?

உருவம்- சிரிப்பால் சிதறிக்கிடக்கிறது. சனங்களின்
மகிழ்ச்சியில் கட்டிடங்கள்
கோபுரங்களாய் எழுகின்றன.
காற்று கீதங்களால் மிதக்கிறது.

அருவம்- அதிருக்கட்டும், சனங்களை நன்றாக
உற்றுப்பார். அவர்களின் இடுப்பில் மர்மக்
கயிறு கட்டப்பட்டிருக்கிறது
தெரியவில்லையா? அவர்களின்
தூரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
எல்லாக் கயிறுகளின் மைய
முடிச்சுக்களையும் வைத்திருப்பவனின்
வர்ணம் பூசப்பட்ட முகத்தினுள்
உள்ளெரியும் கனலை நீ இன்னும்
உணரவில்லையா?

உருவம்- நீ ஏன் அர்த்தமற்றுக் குழம்புகிறாய்.
கயிற்றையும் அதன் மையத்தை
வைத்திருப்பவனின் முகத்தையும் ஏன்
பார்க்கின்றாய். இந்த நகரத்தின்
மினுமினுப்பைப் பார். சனங்களின்
புன்னகையைப் பார். சனங்கள்
முன்னிலும் அழகாயிருக்கின்றார்கள்.
வீதிகள் அழகாயிருக்கின்றன. எங்கும்
வாகனங்களின் இரைச்சல். எப்படி
மாறுகிறது நகரம்.

அருவம்- நீ கடந்த காலத்தின் கண்ணீரை
மறந்துவிட்டாய். மரணங்களை
மறந்துவிட்டாய். வர்ணமடிக்கப்பட்;ட
புன்னகைகளுக்குள் மூழ்கிக்கிடக்
கின்றாய். இந்த நகரத்தின் சுவர்களில்
எண்ணற்ற சாவுகளின் சித்திரவதை
களின் துயரம் படிந்திருக்கிறது.
00
அவன் அவர்களின் உரையாடலையே அவதானித்தபடியிருந்தான். எது பொய்? எது மெய்? பொய்க்கும் மெய்க்குமிடையில் சில நிமிடங்கள் அல்லாடினான். திடீரென வீசிய காற்று, அவன் கைளிலிருந்த புத்தகத்தின் ஒருதாளை தவறுதலாகவோ வேண்டுமென்றோ இழுத்துக் கொண்டு சென்றது.

காற்று வாசித்த கதை
அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் மிரட்சி படர்ந்த கண்களில் ஒரு ஆட்டுக்குட்டி அலைந்துகொண்டிருந்தது. மேய்ப்பனின் தடி தொலைந்துவிட்டது. அவனால் மந்தைகளைக் அடக்கமுடியவில்லை. பச்சை நிலங்கள் எரிந்து போகப்போக மணல்வெளிகளை மேயும்படி கூறிக்கொண்டேயிருந்தான். மந்தைகள் திமிறின. புற்களைத் தேடத் தொடங்கின. மேய்ப்பன் சூழ்ச்சிகளும் சூனியங்களும் புரிந்தான். பொறிகளை வைத்தான். முடியவில்லை. கொலைகளால் அச்சுறுத்தவும் செய்தான். மந்தைகள் திமிறிக்கொண்டேயிருந்தன. இரவுகளில் அவை நழுவத்தொடங்கின.

மறுவாசிப்பு-2
அச்சுறுத்தப்பட்ட பொழுதுகளை குதிரைவீரன் உருவாக்குகிறான். எல்லா முற்றங்களிலும் கள்ளிகள் முளையிடுகின்றன. நிராதரவான சனங்களின் பிணங்களால் இடங்கள் யாவும் நிரம்பியிருக்கின்றன. பிணங்களை எண்ணுவோர் சலித்துப் போயினர். ஊடகங்கள் பலவும் சாவையொட்டியிருந்தன. இறந்தவர்களில் பலர் திரும்பிவரவேயில்லை. சிலரின் வருகை அபூர்வமாய் நிகழ்ந்தது. சனங்கள் பிணங்களைக் கைவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். அவர்களின் முகங்களில் சாவு காலத்தின் களை மிகுந்திருந்தது.

கதைசொல்லியின் மனப்பதிவு
நான் என் தலையில் குளவிக் கூட்டைக் காவித்திரிகின்றேன். எனது நாட்கள் யுத்தத்தின் கால்களினாலையே நடந்தன. மிகப் பெரிய அழிவுகாலத்திலிருந்து மீண்டு வந்த மனிதர்கள் சாபத்தின் மொழியிலேயே உரையாடுகின்றனர். சபிக்கப்படுபவர்களின் தந்திரங்களும், சனங்;களை அரண்களாய் மாற்றும் போதெல்லாம் தாங்கள் யுத்தத்தை மூக்கின் மிக அருகில் முகர்ந்ததாய் அவர்கள் சொன்னார்கள். தங்களின் ஒவ்வொரு தப்பித்தல் முயற்சிகளிலும், அவர்கள் தீயைப் பரவவிட்டதாகச் சொன்னார்கள். தப்பித்து வந்தவர்களில் சிலரும் சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் பலரும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நகரத்திலிருந்து இந்தக் கதை எழுதப்படுகின்றது.

வாசிப்பு-3
அரசன், சரித்திரம் தன்னை அதிவீரனாகப் புனையப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருந்தான். தன்னை வானளவு விஸ்பரூபம் கொள்ளவைக்கும் கனவுகளில் மெய்மறந்தான். எத்தனையெத்தனை மன்னர்கள், எத்தனையெத்தனை வெற்றிகள், எத்தனையெத்தனை தோல்விகள். தான் வெல்ல மட்டுமே பிறந்தவன் எனப்பெருமிதம் கொண்டான். எதற்கும் யாருக்கும் எப்பொழுதும் அஞ்சாதவன் தானெனப் பறைசாற்றினான்.

மறுவாசிப்பு-3
பாவம் மக்கள். வெற்றிக்கும் தோல்விக்குமிடையில் கிழிபட்டுக்கொண்டிருந்தார்கள். பசி பெரும் தீச்சுவாலையாய் வளைந்து வளைந்து எரிந்தது. உடமைகளை இழந்தனர் உயிர்களை இழந்தனர். நம்பியவர்களாலும் நம்பாதவர்களாலும் கொல்லப்பட்டனர். அவர்களின் விருப்பங்களை, தப்பித்தல் முயற்சிகளை மூடி மூடி போர் வளர்ந்துகொண்டேயிருந்தது. கொட்டித் தீர்க்க முடியாத வேதனைகளோடும் இட்டு நிரப்ப முடியாத மரணங்களோடும் அலைந்தபடியிருந்தனர்.

நூலகத்தின் வரைபடம்-3
இரண்டு அடுக்குகளைக் கொண்ட கட்டிடத்தைக் கொண்டது. படிகள் உட்புறமாய் வளைந்து வளைந்து மேலேறுகின்றன. உள்ளே எப்போதும் அமைதியே நிலவுகின்றது. படிப்பவர்களின் கூர்ந்த அக்கறை புத்தகத்தின் உள்ளே அல்லது வெளியே இருக்கும் போதும் அவர்கள் உதடுகளைப் பிரிப்பதில்லை. அறைகளின் பிரமாண்டம் எல்லோர் வாய்களிலும் பூட்டுக்களை மாட்டியிருக்கின்றது. படியேறுவோரும் இறங்குவோரும் நிதானம் தப்பிய கணங்களில் வெளவால்கள் சடசடத்தபடி சுவர்களில் மோதி ஒலியெழுப்பும். மற்றப்படி அவை யாருக்கும் இடையூறு செய்வதில்லை.
00
அவனின் வாசிப்பு தொடர்ந்தது. பொழுதை நிசப்தம் உறிஞ்ச உறிஞ்ச அவன் புத்தகத்தின் எல்லைகளை மேவிமேவிப் பயணித்தபடியிருந்தான். கண்ணுக்கும் மூளைக்குமிடையில் சூரியன் சரிந்துகொண்டிருந்தது. நூலகத்தினுள் இரையும் காற்று அவன் செவிகளை ஊடறுக்கவில்லை. அறைக் கதவுகளை உடைத்தெறியும் வேலை காற்றிற்கும் இருக்கவில்லை. ஏற்கனவே அவை உடைந்துதானிருந்தன.

வாசிப்பு-4
தலை துண்டிக்கப்பட்ட காலம் குதிரை வீரனுடையதாக இருந்தது. காவியங்கள் அவனுக்கானதாக இருந்தன. பதிகங்களாலும் பாடல்களாலும் பக்தர்களாலும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தான். சனங்கள் பற்றிய குறிப்புகள் வரலாற்றுச் சுவடிகளிலிருந்து கிழித்தெறியப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் யாவரையும் வீரன் தனக்குரியதாக்கினான். இரவுகளும் பகல்களும் அவனிடமேயிருந்தன. யுத்தத்தின் சாகசங்களால் தன் காலத்தை நிறைத்திருந்தான். உச்சமாய்ப் புனையப்பட்ட கோடான கோடிக் கதைகளுக்கும் சொந்தக்காரனாக இருந்தான்.

மறுவாசிப்பு-4
அரசனின் மாளிகையில் மந்திரிகள் கூடியிருந்தனர். நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்ட போதெல்லாம் மந்திரியின் குரல் போதையின் மணமாய் ஓலித்தது. சேனாதிபதி நெஞ்சை நிமிர்த்தியவாறே நின்றான். அரசனின் சிம்மாசனத்தின் பின்னால் இலைகள் உதிர்ந்த ஒரு மரம் வளர்ந்திருந்தது. தன் வம்ச வரலாறுகளின் நாயகர்களை நினைத்துக் கொண்டான். யாராலும் உதைத்து விழுத்த முடியாத சிம்மாசனம் தன்னுடையதென பெருமிதம் கொண்டான்.
சனங்கள் தம் தலையில் தாமே அடித்துக் கொண்டார்கள். எதற்கானது இந்தப் போர்? யாருக்கானது இந்தப்போர்? எத்தனையெத்தனை குருத்துக்கள் கருகிப்போயின. வெற்றிகளால் புனையப்படும் காலத்தின் உண்மை முகம் மிகக் கொடூரமாக இருந்தது. உயிர்களைத் தின்னும் இரண்டு துருவங்களுக்கிடையில் பரிதாபகரமான எண்ணற்ற மனிதர்கள் சுருண்டுகிடந்தார்கள்.

வாசிப்பு-5
பிணங்களைக் கணக்கிடுபவர்கள் சோர்ந்து போயினர். வாழிடம் குறுகக்குறுக எல்லா இடங்களுமே மயானங்களாகத்தானிருந்தன. அடையாளங்காணப்படாத சடலங்கள் ஏராளமாயிருந்தன. இறந்தவர்கள் இறந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டனர். சலிப்படைந்த கணக்கிடுவோர் பிணங்களைக் கைவிட்டு ஓடினர். அவர்களை பிணங்கள் துரத்திக்கொண்டிருந்தன. பாலகப் பருவம் மாறாத பிணங்களின் கைகளில் செயலிழந்துபோன துப்பாக்கிகளிருந்தன.
00
அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. பாழடைந்த கட்டடத்தின் சுவர்களில் மோதித்திரிந்தன இரண்டு வெளவால்கள். அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். கண்கள் களைத்துப் போயின. சற்று எழுந்து காலாற நடக்கலாமென எழுந்தான். பாசி படர்ந்த சுவரின் வெடிப்புகளிலிருந்து வெளிப்பட்ட ஓவியங்களை உற்றுப்பார்த்தபடி நின்றான். மிகவும் கொடூரமான ஓவியங்கள் அவனின் கண்களில் மின்னி மறைந்தன. இரத்தமும் சதைச் சிதறல்களும் ஓவியம் முழுவதிலும் சிதறிக்கிடந்தன. படிக்கட்டின் அரைவாசித்தூரம் வரை இறங்கியவனின் கண்களில் சூரியன் ஒளிமங்கிச் செல்வது தெரிந்தது. அவசரமாகப் படியேறி மீண்டும் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினான்.

மறுவாசிப்பு-5
கனவு நகரம் கட்டடங்களை இழந்தவாறிருந்தது. இரத்தம் உறிஞ்சுங் காலம், அழகான புன்னகையைச் சூடியிருந்த நகரத்தில் இப்போது துயர் படிந்த முகத்துடன் காற்று தேசாந்திரியாகத் திரிந்தது. எத்தனை பேச்சுவார்த்தைகள, பிரகடனங்கள், சந்;திப்புக்கள், வாதங்கள், மனமுறிவுகள், காட்டிக்கொடுப்புக்கள், மரணதண்டனைகள் யாவற்றையும் மௌனமாகப் பார்த்திருந்த நகரம் கைவிடப்பட்ட குழந்தையைப் போல அழுது ஓய்ந்திருந்தது. விளக்குகள் அணைந்துபோயின. யாவரும் விட்டுப்போயினர். பாடல் பெற்ற பெருந்தலம் ஒப்பாரியில் சுருண்டுபோனது.

நூலகத்தின் வரைபடம் -4
எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது தொன்மத்தின் சிதைவு. நூலகம் சிதைவடையத் தொடங்கிய காலத்தை நினைவுகூர வேண்டியிருக்கிறது. மகாஞானிகள் இங்கிருந்துதான் பிறப்பெடுத்தார்கள். வன்முறையாளர்களும் இங்குதான் பிறப்பெடுத்தார்கள். வித்தியாசம் என்னவென்றால் கடைசியில் மகாஞானிகள் வெருண்டோடினார்கள், விரட்டப்பட்டார்கள், தோற்கடிக்கப்பட்டார்கள். வன்முறையாளர்களோ புத்தகங்களில் மரணத்தின் முகத்தை வரைந்தார்கள். யாருமே நெருங்க முடியாதபடி வாயிலைப் பூட்டினார்கள். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. பூட்டுக்களில் துருவேறி நைந்து விழுந்தது. எனினும் சனங்களுக்கு அன்னியமாயிற்று நூலகம். ரகசியத் திருடர்களாய் சிலர் இங்கு வருகிறார்கள் உடைந்துகிடக்கும் கட்டடத்திற்காகவும் சிதிலமாகிப் போன புத்தகங்களுக்காக வும் அழுகிறார்கள். மகாஞானிகளுக்கு மறுக்கப்பட்ட வழிகளில் வன்மம் படர்ந்த விழிகளுடன் வன்முறையாளர் கள் காத்திருக்கின்றனர். பொறியாயிற்றுக் காலம்.

வாசிப்பு-6
குதிரை வீரன் தன் காலத்தின் இறுதிப் போரை நிகழ்த்தினான். குதிரைகளுக்கு நம்பிக்கையூட்டினான். சனங்களோ எதையும் நம்பவில்லை. ஒரு புனைவுக்காலம் தம்முன் சருகாகி உதிர்வதை அவர்கள் பார்த்திருந்தனர். மிரண்ட விழிகளுடன் வார்த்தைகளைக் காலடிகளுக்குள் புதைத்த சனங்கள் மீளமுடியாத துயரில் மூழ்கிப்போயினர். வேறுமார்க்கங்கள் இல்லாத போது குதிரைவீரன் சனங்களை அரண்களாக்கினான். குழந்தைகள் வீரிட வீரிட யுத்தத்ததை நிகழ்த்தினான். நாக்குப் பிடுங்கப்பட்ட சனங்கள் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். எங்கும் மரண ஓலம். காவியங்களால் விதந்துரைக்கப்பட்ட வீரன் ஒளிந்து திரிந்தான். வீரதீரப் பாடல்கள் நாறிமணத்தன. காடுகள் கைவிட்டன. கடல் கைவிட்டது. வானம் கைவிட்டது. கடைசியில் நம்பிக்கைகளும் கைவிட்டன.

மறுவாசிப்பு-6
அரசன் கருணை வடிவமான தன் கடவுளிடம் மண்டியிட்டிருந்தான்.அவனின் கைகளில் வெண்ணிற மலர்கள் மலர்ந்திருந்தன. இரத்தக் கறை படிந்த கைகளால் அவற்றைப் பற்றியிருந்தான். காவியுடை தரித்த மதகுரு அவனை ஆசிர்வதித்தார். வெல்லப்படாதிருந்த யுத்தத்தை வெல்லப் போகும் வீரன் நீ என்றார். அரசனின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அவன் ஏதும் பேசவில்லை. ஒருகணம் கடவுளை ஏறெடுத்துப் பார்த்தான். அவரின் முகத்தில் ஏளனச் சிரிப்புப் படர்வதையுணர்ந்தான். மறுகணம் அவரின் கண்களில் கண்ணீர் பெருகுவதைக்கண்டான். அரசன் கவலை கொள்ளவில்லை இரத்தம்; படிந்த கைகளால் அவருக்கு வெண்ணிற மலர்களைச் சாத்தினான். மதகுரு கண் அசைவினால் அரசனைத்தேற்றினான். அது அவர் கடவுளைத் தான் சமாளித்துவிடுவதாய்க் கூறுவதுபோலிருந்தது அரசனுக்கு.
அரசன் கடவுளின் கால்களைப் பற்றியவாறு புலம்பினான் “இந்தப் போரில் நான் வென்றுவிட வேண்டும். நான் சரித்திரத்தின் தொடக்கமாயிருக்க விரும்புகின்றேன். கடவுளே எனக்கு உன் கருணையைப் போதிக்காதீர். கொல்லப்படும் சனங்கள் குறித்துக் கவலை கொள்ளாதீர். யுத்தத்தில் சனங்கள் கொல்லப்படுவது ஒன்றும் புதுமையில்லை. நான் நிகழ்த்துவது மனிதாபிமான யுத்தம் சந்தேகம் கொள்ளாதீர் இது மனிதாபிமான யுத்தந்தான். எனது வீரர்கள் புனிதர்கள் அவர்கள் குறிகளை அறுத்தெறிந்து விட்டார்கள். சித்திரவதைகளை மறந்துவிட்டார்கள். அவர்கள் எதிரியைக் கொல்ல ஆசிர்வதியும்”
கடவுள் தனக்குள் சிரித்துக்கொண்டார். அவரின் காதுகளுக்குள் ஓலங்கள் கேட்டவாறேயிருந்தன. யுத்தத்தை விரும்பாத தன்னிடமே யுத்தத்திற்காக ஆசிர்வதிக்குமாறு கேட்கும் அரசனை அவரால் என்ன செய்யமுடியும். கருணை என்பதும் இரக்கம் என்பதும் காலாவதியாகிப்போன ஆயுதங்களாகிவிட்டன என சலித்துக்கொண்டார். அவரின் முகம் வெளிறி உறைந்துபோயிருந்தது. அரசனின் வேண்டுதல்களால் நிறைந்திருந்த அவரது செவிகளிலிருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.

கதை சொல்லியின் மனப்பதிவு
அரசன் இன்றைய தன் புகைப்படங்களில் குழந்தைப் புன்னகையைப் பொருத்தியிருக்கின்றான். அச்சுறுத்தப்பட்டிருக்கும் நகரங்களின் மூலை முடுக்குகள் எங்கும் பொருத்தப்பட்டிருக்கும் உயர்ந்த வர்ணப் புகைப்படங்களில் அவன் சிரித்தபடியிருக்கின்றான். அவற்றில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இனச்சுத்திகரிப்பின் வார்த்தைகள். நாக்கு அறுக்கப்பட்ட சனங்களை அவன் ஆசீர்வதிக்கின்றான். வற்றாத கண்ணீரையும் வலியையும் வழங்கியவனின் புன்னகை ஒட்டப்பட்டிருக்கும் நகரத்தின் கட்டடப் புதருக்குள் புதைந்துகிடக்கிறது சூரியன்.

வாசிப்பு-7
சுற்றி வளைக்கப்பட்ட பெருமணல் வெளியில் இறுதியுத்தம் நடந்தது. சனங்களை விழுங்கக் காத்திருந்த அரசனின் படைகளிடம் சனங்கள் மண்டியிட்டனர். குதிரைவீரன் தன் வீரர்களாலும் கைவிடப்பட்டான். கடைசியில் ஓளிவட்டக்கனவுகள் சிதையவும் சாகாவரப் புனைவுகளும் சாகசங்களும் அதியற்புதக் கதைகளும் நொருங்கியுடையவும் குதிரைவீரன் தன் கழுத்தைத் தானே …………………

மறுவாசிப்பு -7
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
00
அவன் கைகளிலிருந்த புத்தகத்தின் தாள்கள் உதிர்ந்தன. அவற்றை காற்று எற்றியெற்றியடித்தது. பாழடைந்த நூலகமெங்கும் சிதிலமான காலத்தின் கடதாசித்துண்டுகள் பறந்தபடியிருந்தன. மனதுக்குள் ஏதோ அறுபட்ட உணர்வாய் அவனுக்கிருந்தது. பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டான். மாயங்களாலும் வலிகளாலும் ஆயுதங்களாலும் துயரங்களாலும் வார்க்கப்பட்ட காலம். தியாகங்களாலும் அர்ப்பணிப்புக்களாலும் போர்த்தப்பட்ட காலம், துரோகங்களாலும் சதிகளாலும் பின்னப்பட்ட காலம் கண்ணாடிக் குவளையாய் நொருங்கிக் கிடந்தது. பிள்ளைகளைத் தேசத்தின் பெயரால் ஈர்ந்தவர்களின் கருப்பைகளில் கவிந்திருக்கும் இருள் விலக்கமுடியாதபடி பரவி வருவதையுணர்ந்தான். எல்லாமே பூச்சியத்தில் முடிந்துபோய்விட்டது. கைகளை வான்நோக்கி விரித்தபடி சில நிமிடங்கள் மௌனித்திருந்தவன் படியிறங்கத் தொடங்கினான். தெருமுனையில் அந்த இருவரும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

குறுக்கீடு
அருவம்- குரல்வளை அறுக்கப்பட்டவர்களின் வலியை நீ உணர்கிறாயா?

உருவம் - யாருடைய குரல்வளை அறுக்கப்பட்டிருக்கிறது?

அருவம்- உன்னுடையதும் என்னுடையதும் எல்லோருடையதுந்தான்.

உருவம்- நீ என்ன பிதற்றுகிறாய். சனங்களின் முகம் முன்னரிலும் ஒளிர்கிறது.
அவர்களின் எல்லைகள் விரிந்துவிட்டன.
கனவுகளில் படபடக்கிறார்கள். நீ ஏன்
குழம்பித் தொலைகிறாய்.

அருவம்- புலப்படாத அழுகையும் தீர்க்கப்படாத
துயரமும் ஒரு உறைவாளைப்போல்
அவர்களிடம் உறைந்திருக்கிறது.
பறிகொடுத்தவனுக்குத்தான் இழப்பின்
வலி புரியும். நீ கனவுகளில்
வசிக்கின்றாய். நிஜத்தின் முகம்
கொடூரமானது. கைவிடப்பட்டவர்களின்
வயிறுகளில் இன்னும் பற்றியெரிந்து
கொண்டிருக்கிறது நெருப்பு.
00
அவன் அவர்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தான். சிதறிய சில கடதாசித் துண்டுகள் காற்றில் அலைக்கழிக்கப்பட்டவாறிருந்தன. இன்னும் வாசிக்கப்படாத ஏராளம் கதைகள் அவற்றில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

நன்றி- எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010

மீட்சியற்ற நகரத்தில் செண்பகம் துப்பிய எச்சம்

Thursday, June 17, 2010


சந்திரபோஸ் சுதாகர்

மழைக்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்றத்தொடங்கியிருந்த ஒரு பிற்பகல் நேரத்தில் அவனை அவர்கள் கைது செய்தார்கள்.
சனநடமாட்டம் அதிகமாயிருந்த கடைத்தொகுதியின் மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் புழுக்களைப் போல மிகமிக அற்பத்தனமாக அந்த நிகழ்வு நடந்தது.
கண்களின் மீது இருளடைந்த தெருக்கள் ஊர்ந்தன. மனசிலிருந்த ஓவியங்கள் சிதைந்து போயிற்று. குருதியும் தசையும் மண்டிய புதிய ஓவியங்கள் அவனுள்; தொங்கின. மழை தூறத்தொடங்கிவிட்டது.
கடைத்தொகுதியின் இரண்டு பக்க வாயில்களையும் ஒரு வித கட்டளைக்கு கீழிப்படிகின்றவர்களைப் போல அல்லது அவர்கள் தாங்களே அவற்றைப் பிறப்பித்தவர்கள் போல தங்களால் அடைத்துக் கொண்டு நின்றார்கள்.
வெளியே சூழல் கல்லாயிற்று. யாருடைய பணிகளையும் யாரையும் செய்ய அவர்கள் அனுமதிக்கவில்லை. குழந்தைகளுக்குப் பொம்மைகளை அனுமதிக்காததைப் போல எல்லாவற்றையும் அவர்கள் நிராகரித்தனர். கண்ணுக்குத் தெரியாத வலை ஒன்று இந்த மாலை நேரத்தில் அந்த நகரத்தின் மேலே எறியப்பட்டுவிட்டதை அவன் உணர்ந்தான். குழந்தைகளோ அவர்களுடைய பொம்மைகளோ கூட அந்த வலையிலிருந்து தப்பமுடியாது. பழைய இருளடைந்த தெருக்களின் மேலே காகங்கள் சிறகுகளை ஒடுக்கியபடி பறந்துபோயின.
படிகளின் வசீகரத்தில் சிதறிக்கிடந்த வெற்றிலைக் கறையும் கழிவுகளின் நாற்றமும் இன்னும் அதிகமாய் பீதி கொள்ளச்செய்தது.
இரண்டு வெற்றுத்தாள்களையும் கொஞ்சம் சில்லறைகளையும் ஏனையவற்றையும் கொண்டிருந்த காற்சட்டைப்பையிலிருந்து சகலவற்றையும் வெளியிலெடுக்குமாறு அவனை அவர்கள் நிர்ப்பந்தித்தார்கள். கொஞ்சநேரத்தில் அதற்கு அவசியமற்ற வகையில் ஏழெட்டுப் பேர் அவனைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளால் நிரவினார்கள். எல்லோருடைய கேள்வியும் ஒரேவிதமாக வேறு வேறு வடிவங்களாக இருந்தன.
முரட்டுத்தனமான ஈவிரக்கமற்ற அவர்களது கண்களில் ஒரு மிருகத்தின் மீது பாய்வற்கான வெறி பின்னிக்கொண்டிருந்தது. அவர்களுடைய விரல் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் அவனது உயிருக்கு இனி எப்போதுமே அவன் சொந்தக்காரனாய் இருக்கமுடியாதென்பதை, அதற்கான அருகதை கொஞ்சம் கூட அவனுக்கு இல்லையென்பதை, அவர்கள் கல்லாகிக் கிடந்த அந்தப் பொழுதில் எழுதிவிட்டார்கள்.
காலத்தின் மீது சுற்றி இடப்பட்ட வளையம், தகர்த்து வெளியேற முடியாத படி அவனது குரல் வளையில் நெரித்தது. எல்லாம் முடிந்ததான ஒரு வெறுமை அவனுக்கு முன்னேயும் பினனேயும் படிகளில் ஏறியிருந்தது.
மழை தவிர மற்ற எல்லாமே செத்துப்போயிருந்த அந்த இருபது நிமிட நேரத்தில் நேரம் நகர்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் பேசியதில் பாதிக்கு மேல் புரிந்துகொள்ளக்கூடியதாயிருந்தாலும், இனி அதில் எவ்வித பலனும் இல்லையென்பதை அவன் நன்கே உணர்ந்திருந்தான். அதனால் அவன்; குறித்த அவர்களது மதிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ இல்லை. அல்லது அவர்களது தோள்களில் தொங்கிக் கொண்டிருந்த ஆயுதத்தின் மீதும் கோபத்திலும் வெறித்தனத்திலும் சிவப்பேறிய அவர்களது கண்களின் மீதும் அவர்களது வார்த்தைகளனைத்தும் கட்டுண்டு போயின.
நத்தையைக் கவ்விக்கொண்டு போகும் செண்பகத்தை ஞாபகப்படுத்தியது அவர்களின் செயல்கள் அனைத்தும்: முரட்டுப் பச்சைத்துணிகளால் மூடியிருந்த அவர்களது இதயத்திலிருந்து என்ன விதமான ஒலிகள் எழுகின்றன என்பது குறித்துக் கண்டுபிடிக்க முயன்றான்.
கடைசியில் எல்லா முயற்சியிலும் தோற்றுப்போய், காற்சட்டைப் பையிலிருந்த அவர்கள் ஏற்கனவே பார்க்க விரும்பிய சகலவற்றையும் பரிசோதிக்க அனுமதியளிக்க வேண்டி ஏற்பட்டது. சோர்ந்து போன அல்லது பசியில் நடுங்கிக் கொண்டிருக்கும் கந்தைத் துணிகளால்கட்டி நிறுத்தியிருக்கும் உடலமைப்பைக் கொண்டிருந்த ஒரு மனிதனிடம் அவர்கள் தேடும் எதுவும் இருக்காதென நன்கே தெரிந்திருந்தாலும் பழக்கதோஷத்துடன் கூடிய அவதானத்துடன் அவர்கள் அதனைச் செய்தார்கள்.
அவன் அந்த நகரத்துக்கு வந்த இருபத்து மூன்றாம்நாள் முன்னெச்சரிக்கையுடன் கூடிய நம்பிக்கையீனத்தால் முழுவதும் பீடிக்கப்பட்டிருந்தபோது சீலனுக்கு எழுதிய கடிதத்தை, காற்சட்டையின் பின்பக்கப் பையிலிருந்து மடிப்புக்களிடையே சொற்கள் கிழிந்துதொங்கக் கண்டெடுத்தார்கள்.

ii

மண் கரைந்த தடங்களை அழித்தபடி மழை, காலத்தின் மீது சவுக்காய் விழுந்துகொண்டிருக்கிறது.

iii

நகரின் மத்தியில் மிக உயர்ந்த கூம்புவடிவச் சுவரிலிருந்த நான்கு மணிக்கூடுகளில் ஒன்று கூட மிகச்சரியாக இயங்கவில்லை என்பதை மழைப்புகாரினூடே ஏதோ கெட்ட கனவொன்றைப் போல அவன் கண்டான். கோபுரத்துக்கு இன்று காலையில்தான் வெண்ணிற வர்ணத்தைப் பூசியிருந்தார்கள். வர்ணம் சுவருடன் காய்வதற்கு முன்னர் எல்லாவற்றையும் மழை கரைத்துப்போயிற்று. அவனைச் சூழ நிலவிய சாபத்தின் நிழல் வர்ணங் கலைந்த கோபுரத்தின் மீதும் படர்ந்திருப்பதை ஒரு வித நடுக்கத்துடன் அவதானித்தான்.
இப்படித்தான் மிகக்குறைந்தது ஐந்து வருடத்துக்கு ஒருமுறையாவது வர்ணம் பூசு யாராவது வந்து விடுகின்றார்களென்றும் ஒவ்வொரு தடவையும் மழையோ புழுதியோ அல்லது குறையோ எல்லாவற்றையும் கரைத்தழித்து கோபுரத்தின் சுயசொரூபத்தை மக்களின் காட்சிக்கு – எப்போதுமே மிகச்சரியாக இயங்காத பெண்டுலங்களுடன் விட்டுச்சென்று விடுகின்றன என்றும் இதே தெருவில், காலையில் தான் யாரோ பேசிக்கொண்டு போனதைக் கேட்டான்.
ஆர்வ மேலீட்டால் எதன்பொருட்டுமற்று அப்பேச்சை அப்போது கேட்க வேண்டியிருந்தது. எந்த வகையிலும் அவசியமானதாயிருக்கவில்லை. எனினும், அவர்கள் பேசியதை – அவர்கள் பேசியதன் சாரத்தை இப்போது நினைவு கூர்ந்தான். நேரத்தை இந்த இந்த மரண அவஸ்தையிலிருந்து மீட்கும் பொருட்டு கோபுரத்தினடியில் மாடுகள் சாணமிடுகின்றன. இரவு சலசலக்க கோபுரத்தினடியை மூத்திர நாற்றத்தால் நிறைக்கின்றன. சிலவேளை இவை எதுவுமே நிகழாவிட்டால் ஒரு கழுதையாவது தனது நாக்கால் நக்கி நக்கி வர்ணத்தை தின்றழித்து விடுகிறது. மீண்டும் வர்ணமடிப்போர் வருகிறார்கள் கோபுர முகட்டின் அடுக்குகளிலிருந்து புறாக்களை விரட்டுகிறார்கள். கூடுகளை விட்டுப்பறந்துபோன புறாக்கள் திசைக்கொன்றாய் மீண்டும் கூடு திரும்ப இயலா ஏக்கத்துடன் பறந்து போகின்றன, இனியற்று.
கோபுரத்தின் நிழலில் ப+சிய வர்ணங்களில், எல்லோரும் கண்ட சீராக ஓடும் பெண்டுலம் பற்றிய கனவு கடைசிவரை பலிக்கவேயில்லை யாருடைய இரவுகளிலும்.
மழையின் இருளிலும் சூரியன் மங்கிப்போன வெறுமையிலும் நேரத்தை ஊகிக்கும் முயற்சிகூடப் பயனற்றதாயிற்று.
சுடுகாட்டு நிறத்தாலான அப்பொழுதில், ஆச்சரியப்படும் வகையில் சீலனுக்காக அவன் எழுதிய கடிதத்தை அவர்களில் ஒருவன்; உரத்துப்படித்தான்.
அது உண்மையில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஏனெனில் இதுவரை, இந்த மூன்று மணி நேரத்தில் நகரின் ஜீவனையே இரண்டு விரல்களில் துப்பாக்கியின் நுனியில் அருவருக்கத்தக்க வகையில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் இவர்களில் ஒருவன் கூட அவனுடைய மொழியில் அவனை விசாரணை செய்யவில்லை என்பதை விட முக்கியமானது ஒருவனுடைய அந்தரங்கத்தில் எந்தக் கூச்சமும் வெட்கமும் பயமுமின்றி வெகுசாதாரணமாய் அவர்கள் நுழைத்துவிட்ட காடைத்தனம் தான்.
கடிதத்தைப் படித்துக்கொண்டிருப்பவனுக்கு முன்னர் தான் அதில் என்ன எழுதினான் என்பதை ஞாபகப்படுத்தும் அவசியம் மிகமிக முக்கியமானதாயிற்று இப்போது.
இப்படித்தான் இவையெல்லாம் நிகழ்ந்ததைப்போல எந்த முன்னறிவிப்புமின்றி இக்கடிதமும் எப்போதோ எழுதப்பட்டது.
சீலன், சமரசங்களுடன் வாழ்தல் பற்றிய எல்லாக் கோட்பாடுகளையும் தகர்த்துவிட்டு ஒரு கூட்டிலிருந்து தப்பிவந்து இன்னொரு சிறையில் வீழ்ந்துவிட்டதாகவே எண்ண வைக்கிறது இன்றைய வாழ்க்கை.
எந்த நம்பிக்கையில் நான் இந்த நகரத்துக்கு வந்தடைந்தேன். நிச்சயமற்ற எதிர்காலத்தின் பிரஜையான உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்ன மதிப்பிருக்கிறது இங்கே?
ஓடுகின்ற புகைவண்டியின் இரைச்சலாக அச்சுறுத்திக்கொண்டே இருக்கின்றன செண்பகத்தின் கண்கள்: அவற்றிலிருந்து தப்பித்து எந்தத் தெருவில் ஓடுவது? எந்தத் தெருவிற்கு எந்த முகம்? அல்லது எந்த உடலுக்கு? எங்களால் இனங்காண முடியாதிருப்பது எதன் நிமித்தம்? எல்லா இடங்களிலும் குப்பைத்தொட்டிகள் இருக்கின்றன. யாருமே குப்பைகளைத் தொட்டிகளில் எறிவதில்லை. நாங்களோ ஒருவித ஆற்றாமையுடன் நூறு வீதமும் புனிதத்தை விரும்புகிறோம்: எதிர்பார்க்கிறோம். இந்தச் சாத்தியமற்ற எதிர்பார்ப்பு எமது வாழ்வின் மீதே திரும்பிவிடுகிறது முள்ளாக.
இந்த வேதனையிலும் துயரிலும் யாருக்குத்தான் தெரிகிறது முட்கள் குத்தும்வரை குத்தும் என்று.
1999.08.24 செவ்வாய்க்கிழமை
நீ அவசியம் பார்க்க வேண்டிய நாட்குறிப்பின் ஒரு பகுதி:-
‘சே’ வந்திருந்தான். இன்று பிறந்த நாளாம். நான் நினைக்கிறேன் இது அவனது இருபத்து மூன்றாவது பிறந்த நாளாக இருக்கலாம். அவனுக்கு கொடுப்பதற்காக என்னிடம் எதுவுமே இருக்கவில்லை. நான் இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை. நேரம் 11:38 மதியமாவதற்றுச் சற்றுமுன் - டைத் தாண்டிவிட்டது.
நான்கு பக்கமும் கழிந்த – கயிற்றால் நன்கு பிணைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டியிலிருந்த – அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்த ஒரே பொருள்அதுதான் - புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருக்கிறான். கனமான இறுக்கம். அறைமுழுக்கப்பரவியிருந்தது – நான் எழுதுகிறேன் - நீண்ட நேரத்துக்குப்பிறகு சோர்ந்து களைத்துப்போய் அவன் இந்த அறைக்குள் வந்ததிலிருந்து மூன்றாவது வார்த்தையைப் பேசினான். இதற்கு முன் நான் அவனை இப்படிப் பார்த்ததேயில்லை – சாரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே தேநீர் அருந்துவதற்கான பணம் கூட அவனிடமில்லை. ஊரிலேயே இருந்திருக்கலாம் என்று சொன்னான். நான் அதை எப்போதோ உணர்ந்து விட்டேன். பசியும் வீதிகளில் இறங்கப் பயமுமாய் இந்தக்காலம் கழிகிறது. பின்னேரம் அவன் போய் கொஞ்ச நேரத்தில் எதுவுமே எழுத மனமற்று வெறுந்தரையில் படுத்துக்கிடந்தேன். இன்று முழுவதும் நாங்கள் சாப்பிடவில்லை. முகட்டு வளைக்குள்ளிருந்து ப+னை ஒன்று எதையோ வெறித்துக்கொண்டிருக்கிறது. எலி பற்றிய அதன் நம்பிக்கையோடு.
o
‘சே’யை அவர்கள் கைது செய்துவிட்டார்கள். சரியாக ஞாபகமில்லாத ஒரு திகதியில். மூன்று மணிக்கும் 3.15க்குமிடையில் ஊர் பற்றிய ஞாபகங்களோடு கடற்கரையின் உப்புக்கசியும் மணலில் உட்கார்ந்திருந்தபோது அல்லது கடலின் முடிவற்ற நீட்சி பற்றிய பிரமையில் மனம் வசமற்றிருந்தபோது இது நடந்தது. நான் கவனித்தேன். அவனை அந்த மணலில் இழுத்துச் சென்றபோது எல்லோருடைய கண்களும் செண்பகத்தின் கண்களையே பெரிதும் ஒத்திருந்தன.
சீலன், நாங்கள் மிகமிகச் சாதாரணர்களாகவே இருந்திருக்கிறோம். உழைத்துச் சாப்பிட்;டு தூங்கிப்பின் சாப்பிட்டு…. இப்படியிருந்த எங்களுக்கு அவர்களோ கண்ணீரைப் பரிசளித்தார்கள். சாவையும் அழிவையும் துயரையும் பரிசளித்தார்கள். இருப்பழித்து வீதிகளில் அலைய வைத்தார்கள். திக்கற்றலைந்து அவர்களில் விழுந்த எங்களை விலங்குகளைப்போல இழுத்துச் சென்று சிறைகளில் அடைத்தார்கள்.
‘சே’ என்ற வறுமையிலும் துயரிலும் மெலிவுற்ற ஆனால் கனவுகளால் உறைந்து போயிருந்த எங்களது நண்பனுக்கு சிறிதும் பொருத்தமற்ற உடற்தோற்றத்தில் நாங்கள் கூட்டிய அந்தப் பெயர் எப்போதும் போல துரதிஷ்டம் மிக்கதாகவே ஆகிவிட்டது இப்போதும்.
அவன் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தரிசான வயல் வெளிகளில் நீர் வறண்ட ஆற்று மணலில் - எனினும் எப்போதாவது வரும் என எதிர்பார்க்கப்பட்ட நீர் பற்றிய கனவுகளோடு குண்டுச்சத்தங்களால் துரத்தப்பட்ட போதும், ஊரின் பழந்தெருக்களில் நடந்து போவதான பிரமையுடன் மிக மெதுதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் நீண்ட இடைவெளியை அனுமதித்து சொல்லிக்கொண்டிருந்தான். இடையே கடல் பற்றியும் பேசியிருக்க வேண்டும். அவனுடைய இதயத்திலிருந்து அந்தப் பிரமைகள் வடிந்தடங்கு முன்னரே அவனை அவர்கள் இழுத்துச் சென்று விட்டார்கள்.
சீலன், இது நிகழ்ந்ததற்கான பிரத்தியேக காரணங்கள் எதுவும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. அவன் தனது அந்திம காலத்தில் - அவனைப் பொறுத்தவரையில் இது ஒரு வகையில் அந்திம காலமாகவே இருந்தது – அநேகமான பொழுதுகளை என்னுடைன்தான் கழித்தான் என்பதால் எனக்குத் தெரிந்து இக்காலத்தில் அவன் செய்த இரண்டே குற்றங்கள், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததும் - உண்மையில் அவன் அதைக் கொடுக்கவில்லையே தவிர, அதன் வேதனையாலும் அவமானத்தாலும் குறுகிப் போனான் - நூலகங்களிலிருந்து இதுவரை மூன்று நூல்களைத் திருடியதும் தான்.
ஒரே பிரயாணப் பையுடன் இந்த நகரத்தை வந்தடைந்த எங்களை மிருகங்களைப் போல தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்த இருபத்திநான்கு மணிநேரத்தில் 23 1ஃ4 மணி நேரத்தை தூக்கத்துக்கோ ஏனைய மிகவும் அவசியமான தேவைகளுக்கோஅனுமதியளிக்காமல் இரண்டு மாதத்துக்குப்பின்னர் மிக மோசமான விசாரணையின் முடிவில் நாங்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டோமெனினும், நூலகப் பத்திரத்தில் கையொப்பமிடக்கூடிய தெரிந்த மனிதர்கள் யாரும் எங்களுக்கு இருக்கவில்லை. இதனைக் காரணமாக்கி அவனுக்கான நூலக அனுமதியை வன்மையாக மறுத்துவிட்டனர் அது சார்ந்த அதிகாரிகள்.
அவன் புத்தகங்களை திருடிக்கொண்டு வெளியேறிய எச்சந்தர்ப்பத்திலும் யாரிடமும்அகப்படவில்லை என்றும் மாறாக, தான் திருடிய புத்தகங்கள் அனைத்தும் தடித்த தூசுப்படலம் நிரமிபியதாக இருந்தும் ஒரு வகையில் இப்போதைக்கு யாரும் அவற்றைத் தேடப்போவதில்லை என்ற நம்பிக்கையைத் தருவதாகவும் என்னிடம் அவன் பல தடவைகள் சொல்லியிருக்கிறான்.
இப்படியிருக்க இந்த இரண்டு குற்றங்களுக்காகவுமா அவனை அவர்கள் நாயை இழுத்துச் செல்’வதைப்போல இழுத்துச் சென்றார்கள்.
எனினும் நான் நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிடவில்லை. நிச்சயம் அவன் எங்களை மீண்டும் எப்போதாவது சந்திப்பான். ஒன்றில் சித்திரவதை செய்யப்பட்ட, விரல்ககள் பிடுங்கப்பட்ட, மொட்டையடிக்கப்பட்ட தலையோடு அல்லது பிணச்செய்தியாக. என்னதானிருந்தாலும் நாங்களும் அவனைச் சந்தித்தேயாக வேண்டும். ஏனெனில், அவன் உழைத்ததையும் சாப்பிட்டதையும் போக பட்டினி கிடந்த காலங்களே அதிகம்.
o

1999.06.12 திங்கட்கிழமை இரவு ஒரு மணிக்கு மேல் எழுதிய நாட்குறிப்பு.
நந்தாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அவள் ஏற்கனவே மூன்று வருடங்களிற்கு முன்ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானவள் என்றும் அப்போது அவள் கணவன் கூடவே இருந்தான் என்றும் சாப்பாட்டுத் தட்டுக்களுடன் கூடியிருந்த நீண்ட வரிசையில்எனக்குப் பின்னே கேட்டது. இப்போது மட்டுமல்லஅவள் அந்த முகாமில்அடைக்கப்பட்ட சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாகஅவளும் அவளது மூத்த குழந்தையும்தங்கள் எதிர்காலத்திற்காக நம்பியிருந்த பாதுகாவலனைச் சந்திக்கவேயில்லை என்பது உட்பட வறுமையிலும் நோயிலும் கறுத்துச் சுரண்டிருந்த இப்போது பிறந்திருக்கும் பெண் குழந்தைக்க தகப்பனான 17 வயதே நிரம்பிய சரசுவின் காதலன் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கிணற்றடியில் பெண்கள் குளிக்கமுடீயாதபடி அது திறந்து வெளியாயிருக்கிறது: இராணுவத்தினர் தமதுபச்சை உடுப்புக்களுக்கு மேலாய் செண்பகக் கண்களுக்கு மேலாய் சுடுவிரல்களின் மேலாய் அவர்களை இம்சிக்கிறார்கள்.
ஆண்களை அனுப்பி சிகரெட் பெட்டியும் லைட்டரும் சிவப்பு முத்திரைப் பழைய சாராயமும் வாங்கிவரப்பணிக்கிறார்கள். எல்லாம் திட்டமிட்டபடி. அவர்கள் முகாம்களிலும் வீதிகளிலும் மிருகங்களை ஞாபகப்படுத்தியபடி அலைந்து திரிகிறார்கள். நீயே சொல் மனிதன் தான் மிருகம் எனக்கருதும் - தீங்கு செய்யும்எந்த ஜந்துவிடமாவது ஆத்திரம் கொள்ளாமலிருக்க முடியுமா?இது நான் சொல்வதை நீ எவ்வாறு புரிந்து கொள்கிறாய் என்பதைப் பொறுத்ததெனினும் தயவுசெய்து கேள்.
அதிகாரம் தனது இருதயத்தாலல்ல துப்பாக்கிகளாலும் தோட்டாக்களாலும் தன்னை முண்டு கொடுத்து வைத்திருக்கிறது. அது அவற்றை இழக்கும் வரை - இந்த இழப்பு என்பது எப்போதும் அவர்களால் பாழில் வீழ்த்தப்பட்ட மனிதர்களைப் பொறுத்த விசயமாகவே இருந்து வருகிறதெனினும் - நாடோடி மனித வாழ்வும் அப்பாக்களில்லாத இரண்டு அப்பாக்களை உடைய குழந்தைகளும் யாருமற்ற குழந்தைகளும் சிறையும் சித்திரவதையும் சாவும் பீதியும் தவிர்க்க முடியாததாகி விடும்.
இன்றைய நடுங்கும் இரவில் எல்லோரும் தீ மூட்டுவது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். தீ தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இப்போது எல்லோர் மனங்களிலும்.

iv
கடிதம் இப்படி இடையிலேயே நின்றுவிடும் என்று அவர்களில் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கடிதத்தில் திகதியிடப்படவில்லை. கையொப்பமே கூட இருக்கவில்லை. சிலவேளை எழுதுவதற்கு இன்னும் நிறைய விடயங்கள் இருந்திருக்கலாம். எதன் பொருட்டோ அது முடிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் கொண்டிருக்கவில்லை.
மழை, சூழலில் நிலவியிருந்தகல்லின் மீது அதுவும் ஒரு கல்லாய் விழுந்து தெறித்தது. மிகப் பயங்கரமான ஜந்துவைக் கண்டுவிட்டதான நடுக்கம் கடிதத்தின் மீதிருந்து அகலாத அவர்களின் கண்களில் ஊர்ந்ததை அவன் உணர்ந்தான்.
இவ்வாறானதொரு குற்றச்சாட்டில் தான் கைதுசெய்யப்படப்போவது தவிர்க்க முடியாதென்று நினைக்குமளவிற்கு அவர்கள் எல்லோரதும் முகங்களும் மாறிப்போயின.
தான் நின்றிருந்த சூழலைக் கடந்துவீதியைத் தாண்டி வலையில் அகப்பட்ட எல்லாவற்றையும் மீறி அவனுடைய பார்வை, புறாக்கள் பறந்துபோன, கடந்த சில மணிகளின் முன்னர் தான் வெள்ளையடிக்கப்பட்ட எப்போதுமே மிகச்சரியாக அல்லது அண்ணளவாகவேனும் இயங்காத கோபுரத்திலிருந்த மணிக்கூட்டின் மீது வீழ்ந்ததை அவனால் தவிர்க்கவே முடியவில்லை.
கணத்தில் எந்த முன்னறிவிப்புமின்றி, திடீரென் அவன் மீது விழுந்த வலி எதன் பொருட்டு நிகழ்ந்ததென உணரும் சக்தி அதே வலியால் நிராகரிக்கப்பட்டது.
‘சே’யை இழுத்துச் சென்றதைப் போல, அவனை அவர்கள் இழுத்துச் சென்றார்கள்.
தெருவில் இறங்கியபோது, ஈக்களும் குட்டையும் நிறைந்த வலியாலான நாயொன்று இன்னொரு நாயை துரத்திக் கொண்டிருப்பதை அவன் கண்டான். ஒரு சந்தர்ப்பத்தில் துரத்தப்பட்ட நாய் வெறுமனே வந்து கொண்டிருந்த வேறு நாயொன்றைத் துரத்தத் தொடங்கியது. வீதி முழுக்கப் படர்ந்து போயிருந்த அவனது கண்களின் நிழலில் நூறு நாய்களின் கூட்டம் சொல்லிலடங்கா அருவருப்புடன் ஆனால் வெறியுடன் பிறாண்டிக்கொண்டிருந்தது. வாழ்வின் எல்லாத் தகுதிகளையும் நிராகரித்து.
o

அம்ருதாவின் புதிர் வட்டங்கள்

Sunday, January 17, 2010

சித்தாந்தன்

அம்ருதா தன்னிடமிருந்து என்னிடம் வந்திருந்தாள். அவளது பார்வையில் ஓரிரு பறவைகள் சிறகடித்துப் பறந்தபடியே இருக்கும். எனக்கும் அவளுக்குமான விவாதங்கள் சொற்களின் உச்சத் தொனியில் நிகழத் தொடங்கினாலும் எல்லாம் பூச்சியத்தில்தான் போய் முடியும். பூச்சியத்திலிருந்து ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்து அவமானத்தால் தலை குனிவோம் அல்லது மீளத் திரும்பாத புன்னகைகளைக் காற்றில் எறிவோம். பிறகு எதுவுமே நடக்காதது போலப் பாசாங்கு செய்யத் தொடங்கி விடுவோம்.
கடலின் கரை அலைகளால் துடைத்தழிக்கப்பட்டுக் கொண்டிருந்து. யுகங்களாத்; தொடரும் இந்தத் துடைத்தழிப்பை அன்றுதான் பார்ப்பவள் போல் அம்ருதா அமர்ந்திருந்தாள். அநேகம் சந்தடியில்லாத கடற்கரையையும் சனங்கள் நிரம்பி வழியும் கடற்கரையாகவே அவள் பாவனை செய்வாள். ஏதும் பேசாமல் மௌனித்திருந்தவள் தன் சுட்டுவிரலினால் மணலில் வட்டம் ஒன்றை வரைந்தாள். அந்த வட்டம் நெளிந்த கோடுகளாலான போதும் அவளது வட்டம் வட்டமாகவே இருப்பதாய் பெருமிதப்பட்டிருக்கக்கூடும். திடீரென கேட்டாள்
‘‘நீ வட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறாய்’’ நான் அவளது கேள்வியின் உள்ளர்த்தம் பிடிபடாமல்
‘‘எந்த வட்டம்’’ என்றேன்.
‘‘பொதுவாக வட்டம்;’’
‘‘பொதுவாக எல்லாத் தளவடிவங்களை விடவும் வட்டம் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும்;’’ என்றேன்.
‘‘அவ்வளவுதானா’’
‘‘ஆம்’’
சற்று நிலைத்த மௌனத்தின் பிறகு நிதானமாக அவள் சொன்னாள்
‘‘வட்டம் என்பது நேர்த்தியான கோடுகளோ வெறும் அழகோ அல்ல அதனது உள்ளார்ந்த அர்த்தம் பல பரிமாணங்களையுடையது. நீ எல்லாவற்றையும் நேர்ப் பொருளாய்ப் பார்த்துப் பழகியவன் உன்னிடத்தில் ஆழ்ந்த கருத்துக்கள்; தோன்றாது’’
மிகவும் பெரிதான அலையொன்று எழுந்து வந்து எங்கள் கால்களைக் கழுவிக் கொண்டு வட்டத்தையும் உள்ளிழுத்துப் போனது. அவள் கடலைக் கூர்ந்து கவனித்தபடியிருந்தாள். அவளது கண்களில் ஓரிரு பறவைகள் சிறகடித்துப் பறந்தபடியிருந்தன. அவள் சொன்னாள்
‘‘நீயும் இந்தக் கடலின் அலையும் ஒன்றுதான்’’
‘‘ஏன்’’
‘‘இலகுவாக எல்லாவற்றையும் மூழ்கடித்து விடுகிறது அலை உன்னைப் போலவே. எதன் வலியையும் வேதனையையும் புரிந்து கொள்ளும் மனம் அலைகளிடமும் இல்லை உன்னிடமும் இல்லை’’.
நான் எப்போதும் என்னை அலைக்கழித்தபடியேயிருக்கும் ‘‘ அலைகளைச் சொல்லிப் பிரயோசனமில்லை கடல் இருக்கிறவரை’’ என்ற நகுலனின் கவிதையைச் சொன்னேன்.
அவள் சித்தப் பாவனையில் கண்களை மூடித்திறந்தவளாய்ச் சொன்னாள்
‘‘நகுலனின் கவிதை அலைகள் பற்றியதல்ல கடல் பற்றியது. உன்னுடைய பார்வை அலைகளை நியாயப்படுத்துவது’’
‘‘இல்லை. அது அலைகளையும் பற்றியது. உன் வட்டத்தை இழுத்துப் போனது கடலின் அலைகள்தான். நீ கடலையும் அலைகளையும் வேறுபடுத்துகிறாய். கடலின் கொந்தளிப்புத்தான் அலைகள். உனது மனதின் வலியை வாதையை வார்த்தைகள் பிரதிபலிப்பது போல கடலின் சொற்கள்தான் அலைகள்’’ என்றேன்.
‘‘நகுலன் எல்லாக் குற்றங்களையும் கடலின் மீதுதான் குவிக்கிறார் அலைகள் மீதில்லை’’
‘‘அம்ருதா எல்லாவற்றையும் நேர்ப் பொருளாய்ப் பார்ப்பவள் நீதான். என்னுடைய பார்வையில் நேர்த்தியும் அழகும் தொனிக்கின்றன. உனது பார்வையில் ஒன்றுமில்லை வெறும் சூனியம்’’
அவளது கண்களில் ஓரிரு பறவைகள் சிறகடித்துப் பறந்தபடியிருந்தன. மிதமான மௌனத்தினால் அலைக்கழிக்கப்பட்டவள் போலானாள். எழுந்து கடற்கரையில் பாதங்களைப் பதிக்கத் தொடங்கினாள். பிறகு வந்தமர்ந்து கொண்டு தனது பாதச் சுவடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்றுக்கெல்லாம் ஒரு அலைவந்து அவளது பாதச் சுவடுகளை இழுத்துச் சென்றது. அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவளது பார்வை தன் கருத்தை மீளவும் வலியுறுத்துவது போலிருந்தது. எழுந்து நடக்கத் தொடங்கினாள்.
இன்று அம்ருதாவிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. ஒரு வீட்டுக்குள் வாழ்பவர்கள் கடிதம் மூலம் கருத்துப் பரிமாறுவது வேடிக்கையானதுதான். கடிதத்தை அவசரமாகப் பிரித்தேன். அதில் வார்த்தைகள் காணாமற் போயிருந்தன. வெள்ளைத்தாளின் மையத்தில் பெரிதாய் புள்ளியிட்டு வரையப்பட்ட வட்டமிருந்தது. வட்டத்தின் உள்ளே ஒரு மனித உருவும் விளிம்பில் இன்னொரு மனித உருவும் வரையப்பட்டிருந்தன. உருவங்கள் இரண்டிற்கும் ஆண் பெண் பேதம் தரப்பட்டிருக்கவில்லை.
உண்மையில் அந்த வட்டமும் இரண்டு உருவங்களும் ஏதோ ஒரு புதிர்க்கணக்கை எனக்குத் தந்து விட்டு விடையை அவிழ்க்கும் படி நிர்ப்பந்திருப்பது போலிருந்தது. கடிதம் என் கரம் கிடைத்த கணத்திலிருந்து அம்ருதாவின் செய்கைகள் ஒவ்வொன்றும் விசித்திரமானவையாக இருந்தன. சூரியனுக்கு கீழே நின்று கடலை வெறிப்பவள் போல இருந்தாள். காற்றின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்வாங்கியவளைப் போல அறையெங்கும் சுற்றித் திரிந்தாள். யன்னல்களைச் சாத்துவதும் திறப்பதுமாயிருந்தாள். வானொலியை அதன் ஒலி எல்லைவரை கூட்டி வைத்திருந்தாள். தனக்குத் தெரிந்த பாடல் வரிகளையெல்லாம் பாடிக் கொண்டு திரிந்தாள். முக்கியமாக என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். நான் திசைகளில் அலைந்தவனைப் போல களைப்புறத் தொடங்கியிருந்தேன்.
அம்ருதாவுடனான எனது வாழ்க்கையிலிருந்துதான் அவளது புதிர்க்கடிதத்தின் வாசல்களைத் திறந்து கொண்டேன். அவளது கடிதத்திற்கு இரு வேறு விளக்கங்களை என்னால் பெற முடிந்தது.
1. அம்ருதா வட்டத்தின் உள்ளே வரைந்திருப்பது தன்னை என்றால் விளிம்பில் வரைந்திருப்பது என்னை.
விளக்கம் - வட்டத்தினுள் இருக்கும் தான் தன் உறவுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வட்டத்துள் அடைபட்டவளாய் வாழ்வதாயும் வட்டத்தின் விளிம்பில் நிற்கும் நான் தன்னை வேடிக்கை பார்க்கும் அதே சமயம் என்னைச் சூழ்ந்திருக்கும் உறவுகளுடன் மகிழ்ந்திருப்பதாகவும் கருத இடந்தருகிறது.
2.அம்ருதா வட்டத்தின் உள்ளே வரைந்திருப்பது நான் என்றால் விளிம்பில் வரைந்திருப்பது தன்னை.
விளக்கம் - வட்டத்தினுள் இருக்கும் நான் என் பார்வையை வட்டத்தினுள்ளேயே சுருக்கி வைத்திருப்பதாகவும் வெளியுலகம் எதுவுமே தெரியாதவனாய் என் கருத்துக்கள் மட்டுமே சரியென முரண்டு பிடிக்கும் கினற்றுத் தவளை வாழ்க்கையை வாழ்வதாகவும் தான் விளிம்பில் நின்றுகொண்டு வட்டத்துள் இருக்கும் என்னையும் பரந்து விரிந்த உலகையும் புரிந்து கொண்டவளாக இருப்பதாகவும் கருத இடந்தருகிறது.
அம்ருதாவின் புதிருக்கான என் விடையவிழ்ப்பு எந்த வகையில் சரியானது என என்னால் உறுதியாகக் கூற முடியாத போதும் வாழ்பனுபவங்களின் அடிப்படையில் அம்ருதா கருதியது இவற்றில் ஒன்றாக இருக்கலாம் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம்.
அம்ருதாவை நான் ஒரு மழைக்காலத்தில் சந்தித்தேன். அப்போதவள் எண்ணற்ற வட்டங்களை வரைந்தபடியிருந்தாள். வட்டங்களுக்கென்றே ஒரு குறிப்புப் புத்தகத்தை ஒதுக்கி ஓய்வு நேரங்களிலெல்லாம் வட்டங்களை வரைந்தாள். நான் அவளுடன் உரையாடலைத் தொடங்கிய போது தூறலிட்டுக் கொண்டிருந்த மழை பெரு மழையாகக் கொட்டத் தொடங்கியது. அம்ருதா குமிழியிட்டுடையும் மழைக் குமிழிகளை கூர்ந்து பார்த்து அவற்றைத் தனது குறிப்பு புத்தகத்தில் வரைந்து கொண்டிருந்தாள். அம்ருதா........என்றேன். அவளதைப் பொருட்படுத்தவில்லை. அந்த ஒற்றைச் சொல் மழைக் குமிழி போலவே உடைந்து போனது. நான் அவளது கண்களின் புதிர் அசைவுகளில் மெல்ல மெல்ல கரையத் தொடங்கினேன். மழை இன்னும் பெருமழையாகிக் கொண்டிருந்தது.
அம்ருதா.... என்றேன் மறுபடியும்.
அவள் வட்டங்களிலிருந்து விடுபட்டு என்னிடம் வந்தாள். அவளின் கண்களில் ஓரிரு பறவைகள் சிறகடித்துப் பறந்தன. பரவசம் திளைக்கும் அந்தக் கணத்தில் ஒரு பறவையை வருடிக் கொடுக்கும் இதத்துடன் என்ன என்றாள்.
‘‘நீ ஏன் வட்டங்களையே எப்போதும் வரைந்து கொள்கிறாய்? வட்டங்கள் மீது என்ன அவ்வளவு ஈர்ப்பு?’’ என்றேன்.
அவள் தனக்கே உரித்தான சிரிப்பை சில கணம் உதிர்த்தவளாய்
‘‘வட்டங்கள் புதிர் நிரம்பியவை அதனால்த்தான் வரைகிறேன்’’ என்றாள்.
‘‘வட்டங்களில் அப்படியென்ன புதிர்கள் நிறைந்து கிடக்கின்றன?’’
அவள் சற்று மௌனமானாள். பிறகு சொன்னாள்
‘‘வட்டத்தின் மையமும் விளிம்பும் புதிர்களாலானவை’’
‘‘அப்படி என்ன புதிர் மையத்திலும் விளிம்பிலும் இருக்கிறது’’
‘‘வட்டத்தின் விளிம்பு எதில் தொடங்கி எதில் முடிகிறது என உன்னால் கூறமுடியுமா? வட்டத்தின் மையம் வட்டத்தின் விளிம்பை கண்ணுக்குப் புலப்படா வகையில் ஈர்த்து வைத்திருப்பதை உன்னால் உணர முடிகிறதா?’’
வட்டம் பற்றிய எனது பார்வையை அவளின் கேள்விகள் மீள்பரிசீலனை செய்ய வைத்தன. அவளோ மேலும் வட்டங்களை வரைந்தபடியிருந்தாள். ஓவ்வொரு வட்டமும் கண்ணுக்குப் புலப்படா மையங்களைக் கொண்டிருந்தன. அவளே பேச்சைத் தொடர்ந்தாள்.
‘‘என்ன மௌனமாக இருக்கிறாய்?’’
‘‘புரியவில்லை’’
‘‘எது புரியவில்லை’’
‘‘உனது வட்டங்கள் பற்றிய வாதங்களும் வட்டங்கள் மீதான உனது ஈர்ப்பும்’’
‘‘இதில் உனக்குப் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது. எனக்குப் புரிந்து கொள்கிறது நான் வரைகிறேன். உனக்குப் புரியாத போது புரியாமல் இருப்பதுதான் நல்லது. புரியும் போது புரிந்து கொள்வாய்.’’
‘‘எதைப் புரியும் போது’’
‘‘வாழ்க்கையை’’
‘‘வாழ்க்கைக்கும் வட்டத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது’’
‘‘அதை வாழும் போதுதான் புரிந்து கொள்வாய்’’
‘‘அப்படியென்றால்’’
‘‘வாழ்க்கையை வாழும் போது’’
அவள் தனது குறிப்புப் புத்தகத்துடன் எழுந்து நடக்கத்தொடங்கினாள். அவளது பாதங்கள் வட்டப் பாதையில் நடந்து கொண்டிருப்பதாய் எனக்குப் பட்டது. வட்டப் பாதையின் மையத்தில் நின்றபடி வாழ்க்கை என்ற ஒற்றைச் சொல்லை சுமந்து கொண்டிருந்தேன். அதன் கனம் தோள்களில் இறங்கி பாதங்களை வலி கொள்ள வைத்தது. அவ்விடத்தின் நிலக் காட்சிகள் கரையத் தொடங்கவும் நான் நடக்கத்தொடங்கினேன். எனது பாதச் சுவடுகள் வட்டப் பாதையில் என்னைச்சுற்றியே நடந்தபடியிருப்பதான மனப்படிவு கவிந்தது. நான் நடந்தபடியேயிருந்தேன். என்னிடமிருந்து என்னிடம் வருவதற்குள் மீண்டும் நிலக் காட்சிகள் மாறத் தொடங்கின.
நான் இரவின் புதிர்களாலான பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அம்ருதா இரவின் அடர் வனத்திலிருந்தபடி கனவுகளின் இழைகளைப் படச் சுருள்களாக இழுத்துக் குலைத்தபடியிருக்கிறாள். இரவின் அடர்வனம் அவளது கண்களின் ஒளியில் மின்னுகின்றது. நான் புலன் ஒடுங்கி மூர்ச்சையாகிக் கிடக்கிறேன். இராட்சதப் பல்லியொன்று உரத்துச் சொல்லுகிறது. ச்...ச் சகுணம் தப்பிய ஆத்திரத்தில் அம்ருதா பல்லியைச் சபிக்கிறாள். அது வாலை அறுத்துவிட்டு இருளாகிக் கரைகிறது. இருளின் திரவம் என் மீது படர நான் விழிக்கிறேன். வானொலியின் சத்தம் காதைப் பிளக்கிறது. இன்னும் அழுத்தமான குரலில் அவள் பாடிக் கொண்டேயிருக்கிறாள்.
அம்ருதாவின் புதிர்க் கடிதத்துக்கான பதிலை நான் எழுதப் போவதில்லை. எனது எந்தப் பதிலும் அவளை திருப்தியுறச் செய்வதுமில்லை. என்னால் செய்ய முடிந்தது ஒன்று மட்டுந்தான். அறையின் யன்னல்களும் கதவுகளுமற்ற சுவர்களில் பெரிய பெரிய வட்டங்களை வரைந்தேன். வெறும் வட்டங்கள் எனினும் வீடு முழுவதும் வட்டங்களாற் சூழப்பட்டதான பிரமையிலிருந்தேன். வட்டங்களின் மையங்கள் ஒவ்வொன்றிலும் நானும் அம்ருதாவும் கைகளால் வாய்களைப் பொத்தியபடி முழங்காலில் முகம் புதைத்திருப்பதாய் நினைத்துக் கொண்டே உறங்கிப் போயிருந்தேன்.
மறுநாட் காலையில் விழித்தெழுந்து வட்டங்களைப் பார்த்தேன். ஓவ்வொரு வட்டங்களுக்குள்ளும் ஒவ்வொரு சிறு வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. அம்ருதா இரவு விழித்திருந்து அவற்றை வரைந்திருந்தாள். கோடுகள் ஒன்றின் மேல் ஒன்றாக பல தடவைகள் வரையப்பட்டிருந்தன. தவிரவும் கோடுகள் நேர்த்தியற்று வளைந்தும் இருந்தன. அவை நித்திரைக் கலக்கத்தோடு வரையப்பட்டவையாக எனக்குத் தோன்றியது.
அம்ருதா என்னை அவிழ்க்க முடியாத புதிர்களை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கிறாள். ஒரு புதிரை இன்னொரு புதிரால் மூடுகிறாள். புதிர்களின் இராணியைப் போலவே இருக்கிறாள். அம்ருதா போடும் புதிர்களெல்லாம் வட்டங்களாலேயே போடப்படுகின்றன. அவளது புதிர்கள் பலவும் எனது மூளையை அனலாக்குபவை அல்லது மனதை ஆறுதலற்று வாழ்க்கையின் தடங்கள் முழுவதிலும் மீள நடந்து அலைக்கழிய வைப்பவை.
நான் அவளது படுக்கையறைக்குச் சென்று பார்த்தேன். அவள் குழந்தையைப் போல உறங்கிக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் ஓரிரு பறவைகள் உறங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது. அறையின் மங்கலான பசிய ஒளி அவளைப் புதிர்களின் இராணிபோலவே பிரதிபலித்தது. அவள் இடையிடையே சிரித்தபடியே உறங்கிக் கொண்டிருந்தாள்.
பூக்களும் புலரத்தொடங்காத அந்தக் காலையில் நான் நெடுஞ்சாலை வழியே நடந்து கொண்டிருந்தேன். புருவங்களுக்குள் விழியேறி பெரு வட்டமாகப் பாதைகள் வளைந்து சுழல பாதையில் விழுந்தேன். வாலறுந்த பல்லி என் உச்சந் தலையில் விழுந்து துள்ளி நின்றது. அம்ருதா இல்லாத எனது பயணத் தெருக்கள் வட்டங்களாகச் சுருங்கிவிடுகின்றன. திரும்பவும் திரும்பவும் ஒரு பாதையிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறேன். எண்ணிச் சொல்ல முடியாதத் தடவைகள் வாலறுந்;த பல்லியையே சந்தித்துக் கொண்டுமிருக்கிறேன்.
பல்லி இரண்டு கால்களில் எழுந்து நின்ற படி இராட்சதக் கால்களால் சாலைகளை மிதித்து ஓடுகிறது. அதன் கால் பதித்த தடங்களில் கரீய நீரூற்றுச் சுரக்கிறது. அது பெருகி கறுப்பு நதியாக என்னை நோக்கி ஓடி வருகின்றது. நான் பதற்றத்துடன் எழுந்தோடுகின்றேன். அன்றைய மாலையில் பூக்கள் உதிர்ந்து சருகாகிக் கொண்டிருந்தன.
நான் வரைந்த பெரிய வட்டங்களுக்குள் அம்ருதா வரைந்த சிறிய வட்டங்கள் குறித்து என்னால் இரண்டு அபிப்பிராயங்களை முன் வைக்க முடிகின்றது.
1.நான் வரைந்த பெரிய வட்டங்கள் நான் என்றால் அம்ருதா வரைந்த சிறிய வட்டங்கள் அவள்.
விளக்கம் - என்னைப் பெருவட்டமாகக் காணுமவள் நான் தன் இருப்பை மறுப்பதாகவும் என் ஆளுமையின் கீழ் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகவும் தன் சுயத்தை தனக்கான அடையாளத்தையிழந்து எனது ஆட்படுகையிலிருந்து வெளியேற முடியாதிருப்பவளாய் உணர்வதாகவும் எத்திசை நோக்கி நடந்தாலும் என் வட்ட விளிம்புகளில் மோதி ஒரு பந்தைப் போல தான் அலைக்கழிக்கப்படுவதாகவும் அவள் கருத இடந்தருகிறது.
2. நான் வரைந்த பெரிய வட்டங்கள் அம்ருதா என்றாள் அவள் வரைந்த சிறிய வட்டங்கள் நான்.
விளக்கம் - தன்னை பெரு வட்டமாகக் காணுமவள் தன்னைத் திமிர் மிக்க பெண்ணாகவும் எனது எல்லாச் செயற்பாடுகளையும் தானே வடிவமைப்பவளாகவும் குறிப்பாக என்னை எனது உறக்கங்களிலிருந்து துரத்துபவளாகவும் என் கனவுகளைக் குலைப்பவளாகவும் எப்போதும் எனக்குக் கட்டளைகளைப் பிறப்பிப்பவளாகவும் நான் தனக்குச் சேவகம் செய்ய வேண்டியவனாக் இருப்பதாகவும் கருத இடந்தருகிறது.
எனது இந்த அபிப்பிராயங்களும் அம்ருதா கருதியவற்றிற்கு ஒத்ததாகவோ அல்லது மாறுபட்டதாகவோ இருக்கலாம்.
கோடையின் அனல் தெருக்களில் படிந்திருந்த மதியத்தில் அம்ருதாவின் அறைக்குச் சென்றிருந்தேன். சாத்தப்பட்டிருந்த கதவை தட்டிக்கொண்டிருந்தேன். அவள் பதற்றத்துடன் கதவைத் திறந்து என்னை ஏறிட்டாள். அவளது உதடுகளில் மலர்ச்சி வழியவில்லை. கண்களில் இரண்டு பறவைகள் குறுகிக்கிடந்தன. உள்ளே வரும்படி சைகை செய்தவளாய்
‘‘என்ன இந்த நேரத்தில்’’ என்றாள்.
சட்டைப் பையிலிருந்த காகிதத்தை எடுத்து அவளிடம் நீட்டினேன்.
‘‘என்ன இது’’
‘‘நான் வரைந்த வட்டங்கள்’’
அவளதைப் பிரித்துப் பார்த்தாள். மறுகணம் என் கைகளில் அதை அழுத்தித் திணித்துவிட்டு
‘‘என்ன பைத்தியக்காரத்தனம்’’ என்றாள்
‘‘எது பைத்தியக்காரத்தனம்?’’
‘‘ஏன் சதுரத்துக்குள்ளும் சதுரத்தின் உச்சிகளைத் தொடுமாறும் வட்டங்களை வரைந்திருக்கிறாய்’’
‘‘இவை உள்வட்டங்களும் வெளிவட்டங்களும்’’
‘‘வட்டத்தில் என்ன உள்வட்டம் வெளிவட்டம் வட்டம் வட்டந்தான்’’
‘‘வட்டத்தின் விளிம்பு சதுரத்தின் விளிம்புகளைத் தொடுமாறு வரைவது உள்வட்டம். சதுரத்தின் உச்சிகளைத் தொடுமாறு வரைவது வெளிவட்டம்’’.
அவள் கண்களைச் சில தடவைகள் இமைத்தாள். இரண்டு பறவைகள் சிறகடித்தபடியிருந்தன.
‘‘நீ வட்டத்தின் முழுமையைச் சிதைக்கிறாய் அதை சதுரத்தினுள் அடைத்து அதன் பரிமாணங்களை மூடுகிறாய்’’ என்றாள்.
‘‘நான் வட்டங்களை வரைந்திருக்கிறேனே தவிர பரிமாணங்களை வரையவில்லை. பரிமாணம் என்பது அவரவர் பார்வையைப் பொறுத்தது’’
‘‘அப்படியில்லை வட்டங்களை வரையும் போது பரிமாணங்களையும் நீ முன் வகுக்க வேண்டும்.’’
‘‘வட்டத்தின் பரிமாணம் வட்டத்pற்குரியது. எனது பரிமாண வகுப்பை வட்டத்தின் மீது திணிக்க முடியாது.’’
‘‘அப்படியென்றால் வட்டம் வரையும் நீ யார்?’’
‘‘நான் கருத்தா’’
‘‘கருத்தாவுக்குரிய கடமை வட்டங்களை வரைவது தானா?’’
‘‘ஆம்’’
‘‘நீ கருத்தாவல்ல வெறும் ஜடம். ஜடத்திடமிருந்து கருத்துக்கள் பிறப்பதில்லை.’’
அம்ருதா வார்த்தைகளால் வெடிக்கத் தொடங்கிளாள். அவளது சொற்கள் மின்னலாய்த் தெறித்தன.
வார்த்தைச்சுழல் வட்டம் புயலாக்க கிளம்பி அந்தப் பொழுதை இழுத்தடித்த வண்ணமிருந்தது.
‘‘அம்ருதா உன் வார்த்தைகளில் நிதானம் உலரத் தொடங்கிவிட்டது’’ என்றேன்.
‘‘என் வார்த்தைகளில் நிதானமும் அர்த்தமும் இருக்கின்றன.’’
‘‘நீ பாசாங்கு காட்டுகிறாய் அர்த்தமற்ற சொற்களை நோக்கி என்னை இழுக்கிறாய்.’’
‘‘நான் அர்த்தமற்ற சொற்களை நோக்கி இழுக்கவில்லை வாழ்க்கையின் பரிமாணங்களை நோக்கி உன்னைத் திருப்புகிறேன்.’’
‘‘வாழ்க்கையின் பரிமாணங்களை நீ எனக்குப் புரிய வைக்கத் தேவையில்லை’’
அம்ருதாவின் அறையிலிருந்து வெளியேறினேன். கொழுத்தும் கோடையின் அனல் முகத்தில் எரிந்து கொண்டிருந்தது. முடிவற்ற தெருக்களில் அலைந்து திரிந்தேன். மாலையானதும் வெறுப்புணர்வு படிந்த மனத்துடன் என் அறையை அடைந்தேன். அறைக் கதவில் செதுக்கப்பட்டிருந்த வட்டங்கள் கதவிலிருந்து இறங்கி தரையெங்கும் பரந்து கிடந்தன. அவற்றைப் பொறுக்கி மீண்டும் பொருத்தத் தொடங்கினேன். வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி பறக்கத் தொடங்கின. அவை வண்ணத்துப்பூச்சிகளின் சாயலிலும் கருங்குழவியின் சாயலிலுமாகப் பறந்தபடியிருந்தன.
வாலறுந்த பல்லி அறைச்சுவர்களில் குதித்துக் குதித்து ஓடித்திரிகிறது. முன்பு அதற்கு வாலிருந்ததிற்கான தடையமும் அற்றிருந்தது. அதன் ரேகைகள் சுவர் முழுதும் படிந்திருந்தன. அழுத்தமான அதன் ரேகைகளில் கனவுகளின் கரிய குரல் முனங்கிக் கொண்டிருந்தது. குரல்களின் அதிர்வில் சுவர் மெல்ல மெல்ல வர்ணமிழக்கத் தொடங்கியிருந்தது. சுவரின் வர்ணங்கள் உதிர்ந்து புழுதியாச் சுழல ஆரம்பித்தன. புழுதி அறைகளைத்தாண்டி வீடு முழுமையுமாகப்படர்ந்து அடங்குகையில் கரியதான புழுதி கடலாகியது. கடலில் நானும் அம்ருதாவும் மிதந்தபடியிருக்கிறோம். வாலறுந்த பல்லி அகாலத்திலிருந்து குரலெழுப்பத் தொடங்கியது. ச்.....ச்... பல்லியின் குரலால் சகுணந்தப்பியதாய் கோபத்தில் அம்ருதா சபிக்கத் தொடங்கினாள். பல்லி கரிய கடலில் குதித்தெழுந்தது. அதன் உடல் முழுதும் வட்ட வட்டமாகச் செதில்கள் முளைத்திருந்தன. செதில்கள் சேர்ந்து இறக்கைகளாக பல்லி பறக்கத் தொடங்கியது. கடல் வற்றிய கருஞ் சேற்றில் புதைந்து கிடந்தோம் நானும் அம்ருதாவும்.
வெள்ளிக் கிழமைகளில் வீடடின் முற்றத்தில் கோலம் போடுவதை அம்ருதா வழக்கமாகவே கொண்டிருக்கிறாள். அவளது கோலங்கள் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகவே இருக்கும். அவளுக்கும் எனக்கும் எவ்வளவோ முரண்பாடுகள் இருந்த போதும் அவளைப் பாராட்டுவதான வார்த்தைகளைப் போகிற போக்கில் காற்றில் மிதக்கவிடுவேன். ஆனால் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வெளிவராது. நானும் எதிர்பார்ப்பதுமில்லை. கோலத்தின் கோடுகளின் நேர்த்தி
யும் வளைவுகளும் முற்றத்தை புத்தெழிலுடன் மினுங்க வைக்கும். வீட்டுக்கு வருவோர்கள் கோலத்தை மிதித்தழித்து விடாதிருக்க கடும் வர்ணங்களால் கோலத்தைப் போடுவாள். கண்களை ஆக்கிரமிக்கும் அந்த வர்ணங்கள் வருவோரை நிதானப்படுத்தும்.
அம்ருதாவின் கோலத்தை வீட்டுக்கு வரும் எவரும் பாராட்டாமல் விட்டதில்லை. அவளைக் கோலக் கலையின் நிபுணியாகவே எல்லோரும் கூறினார்கள்.
இம்முறை அம்ருதா வரைந்த கோலம் விசித்திரமாக இருந்தது. வழமையாக எந்தக் கோலத்திலும் வட்டங்களை அவள் பயன்படுத்துவதில்லை இன்றைய கோலம் அவள் தனது விதியை மீறிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. கோலத்திலும் தனது புதிர் விளையாட்டைத் தொடங்கியிருந்தாள்.
இரண்டு வட்டங்களை ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி வரைந்திருந்தாள். ஒரு வட்டத்தின் விளிம்பை மற்றைய வட்டத்தின் விளிம்பு தொடுவது போலவும் தொடாதது போலவும் கருதுமாறு வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. உள்வட்டத்தை வெளிவட்டம் சிறைப்பிடித்து வைத்திருப்பது போல அவளது கோலம் அமைந்திருந்தது.
இந்தக் கோலம் முற்றத்தின் அழகு முழுமைiயும் தின்றுவிட்டிருந்தது. முற்றம் ஒரு பாலைவனமாகியிருப்பதான பிரமையைத் தோற்றுவித்தது. வீட்டுக்கு இம்முறை எவரும் வரவில்லை. அது அம்ருதாவின் விம்பத்தை உடைய விடாமல் காத்துக்கொண்டிருந்தது. அவளும் யாரையும் எதிர்பார்க்கவுமில்லை. வழமைக்கு மாறாக வீடு அமைதியில் ஊறிக்கிடந்தது.
இந்த வட்ட அடுக்குக் கோலம் பற்றி நான் பலவாறும் பல வழிகளில் பல தடவையும் யோசித்தேன். கோலத்தின் மூலம் அவள் எனக்கு உரைக்கும் செய்திகள் எவை? அவற்றின் பரிமாணங்கள் எத்தனை? எண்ண இழைகளில் இழுபட்டபடியே அலைந்தேன்.
சர்வசாதாரணமாக வாலறுந்த பல்லி வீட்டின் வரவேற்புக்கூடத்தில் அமர்ந்திருந்தது. அதன் கருத்து முழுமையிலும் எது நிறைந்திருந்ததோ தெரியவில்லை. திடீரென எழுந்து கூத்தாடத் தொடங்கியது. பிரபஞ்சம் புரண்டசையும் கூத்து. ஆட்டத்தின் வேகத்தில் அதனது கால் விரல்களில் நகங்கள் முளையிடுகின்றன. வேகம் கூடக்கூட நகங்கள் நீண்டு வளர்ந்தபடியேயிருக்கின்றன. கூத்து தாண்டவமாக உருமாறுகிறது. நரம்புகள் விம்மிப்புடைந்து வெடிக்கின்றன. அது ஆடுகிறது. அதனது கரிய இரத்தம் வரவேற்புக்கூடம் எங்கும் பெருகியோடுகிறது. அதனது ஆட்டத்தின் தொடக்கப்புள்ளி எதில் தொடங்கியது என்றே அது மறந்திருக்க வேண்டும். நிறுத்தும் வழி தெரியாமல் ஆடிக்கொண்டேயிருக்கிறது. எல்லையற்ற ஆட்டத்தின் உச்சத்தில் சுழன்று கீழே விழுந்தது. வரவேற்புக் கூடத்தின் நிறம் மாறத் தொடங்கிவிட்டது. பல்லி புள்ளியாகச் சிறுத்துக் காணாமல் போனது. அதன் கரிய திரவம் மட்டும் சாம்பற் புழுதியாய்ச் சுழன்றடித்தது.
அம்ருதா தனது வட்ட அடுக்குக் கோலம் பற்றி ஒரு குறிப்பை எழுதி வரவேற்புக் கூடத்தில் ஒட்டியிருந்தாள். என்னால் அப்புதிரை அவிழ்க்க முடியாதிருப்பதாய் அவள் நினைத்திருக்கக்கூடும். அவள் கோலம் போட்ட நாளிலிருந்து அநேக இரவுகளை விழித்திருந்தபடியே கழித்துக் கொண்டிருந்தேன். மின்சார விளக்குகளின் ஒளி ஏதோ என் இரகசியங்களை அரித்துத் தின்று கொள்வது போலிருந்ததால் அதனையும் அணைத்துவிட்டிருந்தேன். ஓளியற்ற பொழுதுகள் எனக்கு நெருக்கமான உணர்வுகளைத் தந்தன. இருளின் மீது மிதந்துகொண்டிருப்பவனாய் இருந்தேன்.
அம்ருதாவின் குறிப்பை நான் வாசிக்கத் தொடங்கினேன். எல்லா எழுத்துக்களும் சர்ப்பங்களாக வளைந்து வளைந்து ஊர்ந்தன. முதலாவது எழுத்தை வாசிப்பதற்குள் இறுதி எழுத்து முன் நகர்ந்து அதன் அர்த்தங்களைக் குழப்பிக் கொண்டேயிருந்தது. நீண்ட நேரமும் அதீத சிரமங்களுடனும் அதை வாசித்தேன்.
அவளின் குறிப்பு
‘‘நான் போட்டிருக்கும் இந்த வட்டக் கோலம் உன் புரிதலுக்கு ஏற்ற ஒன்றல்ல. உனது நேரடியான கருத்துக் கொள்ளலுக்கு முற்றிலும் மாறுபட்டது. நீ சிந்தனை மாற்றங்களுக்கு உள்ளாகும் போதுமட்டுந்தான் கோலத்தின் அர்த்தம் பிடிபடும். நீயோ உனது சிந்தனைகளைக் குறுக்கி வைத்திருக்கிறாய். உனது அறையின் கனதி போலவே உனது சிந்தனையும்.
எனது கோலம் கொண்டிருக்கும் இரண்டு வட்டங்களில் எதை வேண்டுமானாலும் நீ உன்னைப் பாவனை செய்யலாம். இரண்டு வட்டங்களும் விளிம்புகளால் அண்மித்திருப்பவை. ஒரு வட்டம் இன்னொரு வட்டத்திலிருந்து பிரிந்து செல்லவோ விலகியிருக்கவோ முடியாது. ஒரு வட்டத்திலிருந்து மற்றைய வட்டத்தை பிரித்தெடுப்பதும் சாத்தியமில்லை. வெளிவட்டத்துக்குள் உள்வட்டம் சுருங்கிக் கிடப்பதாகவும் நீ கருதலாம் அல்லது உள் வட்டம் வெளிவட்டத்தை நகர முடியாமல் இழுத்து வைத்திருப்பதாகவும் நீ கருதலாம்.
நீ உனது சிந்தனைக் கருதுகோள்களின்படி எதை வேண்டுமானாலும் செய்து கொள்ள முடியும் ஆனால் வட்டங்களைப் பிரித்தெடுக்க முடியாது. நிஜத்தில் கோலத்தின் வட்டங்கள் கோடுகளின் நேர்த்தியின்படி அழகாகவே எனக்குப் படுகின்றது. நீ முகம் சுழித்தபடி பார்த்ததை நான் கவனித்தேன். தவிரவும் வட்டங்களின் பச்சை சிவப்பு நிறங்களைக் கண்டு நீ மண்டையை உடைக்கத் தேவையில்லை.அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை. வட்டங்கள்தான் முக்கியமானவை. வட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அல்லது வட்டங்களாகவே நீயும் நானும் இருக்கிறோம்.’’
இந்தக் குறிப்பை வாசித்த பிறகுதான் என் மூளை முன்னரிலும் வேகமாகச் சூடேறிக் கொண்டிருந்தது. பெரும்பான்மையும் அவளின் முன்னைய வட்டப்புதிர்களுடன் எனது கருதுகோள்களும் பொருந்தியேயுள்ளன. அம்ருதாவின் மூளை புதிர் நரம்புகளால் வடிவமைக்கப்பட்டதாயிருக்க வேண்டும். அவளால் நுன்மையாக்க கருத்தமைக்கப்படும் வட்டங்கள் எல்லாவற்றிலும் மையங்களில் குவிபவனாகவோ கோடுகளில் வளைபவனாகவோ நானிருக்கிறேன். அவளும் அவ்வாறுதானிருக்கிறாள். ஒரே குவியத்தில் மாறுபட்ட மனமுடையவர்களை எப்படி அவளால் வரையமுடிகின்றது.
எனது சிந்தனைகளும் கேள்விகளும் எனக்குப் புதிர்களாயின. என்னைச்சுற்றி நானே புதிர்க்கோடுகளை வரையலானேன் எவற்றிலும் நேர்த்தியில்லை.
வாலறுந்த பல்லி தனது கண்களை உருட்டியபடி அகாலத்திலிருந்து ஊர்ந்துவருகின்றது. நீண்டு நெளியும் அதனது வயிறு பெருத்திருக்கிறது. அது இரைதேடத் தொடங்கிவிட்டது. அதன் வாய் அகல விரிந்திருக்க சுவரிலிருந்து இறங்குகிறது. அதன் பார்வை வட்டமாய்ச் சுழன்று மையமாகிக் கிடக்கும் என்னில் நிலைக்கவும் என்னருகில் வந்து என் இரகசியங்களை ஊர்ந்து ஊர்ந்து கடக்கின்றது.
திடீரென பல்லி இரண்டு கால்களில் எழுந்து நிற்கின்றது. அம்ருதா என் அறையின் திரைச்சீலையில் நிழலாக அசைகி;றாள். அவளது நிழலிலிருந்து எண்ணற்ற வட்டங்கள் என் அறையில் குவிகின்றன. ஒன்றோடு ஒன்று சங்கிலியாகப் பிணைகின்றன. பல்லி எழுந்து சங்கிலியின் முனையைத் தேடியெடுத்து வாயினுள் வைத்து உள்ளுறுஞ்சுகிறது. வட்ட சங்கிலி அதன் வயிற்றை நிறைக்கிறது. அம்ருதாவின் மிரண்ட முகமாய்த் திரைச்சீலை அசைகிறது. பல்லி அறைக்கதவைத் திறந்து வரவேற்புக் கூடம் வழியே வெளியேறுகின்றது. அதன் காற்தடங்களில் கரிய திரவம் சுரந்து கடலாகிறது. வீடு முழுமையும் கரிய திரவக் கடலில் நிறைகிறது. பல்லி தடயமற்று வெளியேறி விட்டது.
வரவேற்புக் கூடத்தில் அமர்ந்து அம்ருதா புத்தகம் படித்தபடியிருக்கிறாள். வட்டப் புதிர்கள் பற்றிய புத்தகம். அதன் அட்டைப்படம் வட்டங்களால் நிறைந்து தெரிகிறது. அவள் தீவிரமான வாசகியாகப் படித்தபடியிருக்கிறாள். அவளின் முன்னால் ஒரு வெள்ளைத் தாளும் வாணப்பெட்டியும் பென்சிலும் இருக்கின்றன. அவள் இரவாவதற்குள் இன்னோரு புதிரை வரைந்து விடுவாள். நான் வரவேற்புக் கூடத்தில் நிலைகொள்ள முடியாதவனாய்ப் படுக்கை அறையை நோக்கிச் செல்கிறேன்.