சித்தாந்தன்
பாழடைந்த நூலகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருந்தான். புதர்களும் குப்பைகளுமாக சிதறிக்கிடக்கும்; அந்த இடத்தில் சற்றுக்கு முன்புதான் மௌனம் கலையாமல் மரத்தின்கிளைகள் சலசலக்க அந்தப் பட்ஷி பறந்திருந்தது. அவன் நூலகத்தைப் பார்த்தான் புராதன சுவர்களில் எண்ணற்ற வெடிப்புக்களிடையே பசுமை படர்ந்திருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்டுவிடத்தவறும்
ஓவியங்கள் சுவர்களில் மறைந்திருந்தன.
ஏராளமான காலடிகளின் ஓசை படிக்கட்டுக்களில் கேட்டுக் கொண்டிருந்தது. யார் வருகிறார்கள்? அவன் திரும்பிப் பார்த்தான் எவருமேயில்லை. ஆனாலும் இடைவிடாத ஓசை கேட்டபடியிருந்தது. அவன் மேலேறிச் சென்றான். புத்தகங்கள் எங்கும் சிதறிக்கிடந்தன. தாள்கள் காற்றில் எழுந்து பறந்தபடியிருந்தன. யாரோ வாசிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. அவனின் மௌனத்தை விட்டத்தில் தொங்கவிட்டு சவுக்கால் அடிப்பது போன்ற பிரமையை உணர்ந்தான். யாருமில்லாத நூலகத்தில் யாரேனும் எப்போதுமிருந்து கொண்டுதானிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டான்.
நேரம் நடுப்பகலைத் தொட்டுக் கொண்டிருந்தது. இத்தோடு அவன் இந்த நூலகத்திற்கு நூறாவதோ அல்லது நூற்றியோராவது தடவையோ வருகின்றான். நூலகத்தின் சுவர்களின் வெண்ணிறம் உதிராத நாட்களில் அவனது அநேக பொழுதுகள் இதனுள்த்தான் கழிந்தன . இப்போது பழுப்பேறிய சுவர்களில் வேர் விட்டிருக்கும் மரங்களும் திறந்துகிடக்கும் கதவுகளும் கூரைகளும் மனதை என்னவோ செய்வது போலிருந்தன.
நூலகத்தின் வரைபடம்-1
கனவுகளின் தொலைவின் நீளமும் நினைவுகளின் எல்லை அகலமும் கொண்டது நூலகத்தின் வளவு. பிரதான வீதிகள் குறுக்கிடும் சந்தியில் வெண்ணிற மாளிகையாய் விளங்கியது. போகவும் வரவும் வேறுவேறான பாதைகள். பிரதான வாயிலின் அருகே நீர்க்குழாய். பின்புற வாயிலை அண்டியதாக மலசல கூடம் .காற்று எல்லாப் பொழுதுகளிலும் சுதந்திரமாக வீசியபடியிருந்தது.
00
அவன் அவசரமாக புத்தகங்களையும் கிழிந்த தாள்களையும் பொறுக்கினான். பரிச்சயமற்ற புத்தகங்களின் எண்ணற்ற பக்கங்களையும் சேகரித்தான். இப்போது நேரம் நடுப்பகலைத் தாண்டியிருந்தது. உதிரியாகக்கிடந்த தாள்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினான். மிகப்பெரும் புத்தகமாக அது இருந்தது.
வாசிப்பு-1
சற்றும் தளராத அரசன் வென்ற நகரங்களைக் கணக்கிட்டபடியே வந்தான். கருமை மூடிய வனங்களையும் எரிந்து கருகிய நிலங்களையும் அவன் கண்டு கொள்ளவில்லை. மிருகங்களையும் பறவைகளையும் கூவியழைத்தான். திசைகள் எட்டல்ல பதினாறு எனச் சத்தமிட்டான். புரவிகளின் குழம்பொலி கலையாத தெருவில் அவன் கம்பீரமாக சென்று கொண்டிருந்தான். மண்மேடான குடிசைகளைக் கணக்கிடத் தவறினான்.
மறுவாசிப்பு-1
எப்போதும் சனங்கள் விரட்டப்பட்டபடிதானிருக்கிறார்கள். விரட்டுபவர்களின் முகங்கள் மாறுகின்ற போதும் குணங்கள் மாறுவதில்லை. ஒடுங்கிய குவளைக்குள் தகித்துகொண்டிருக்ககும் மதுவைப் பருகியபடி அரசன் சொல்கின்றான் “சிறகுகளில்லாத ஒருவன் தேவதை தன் கனவுகளைக் குடிப்பதாய்”. சிதிலமான நிலங்களின் வரைபடங்களின் மீது வழிந்து சிதறிய அதன் வீணீரைத் தன் உள்ளங்கையால் துடைத்தவாறு அரசன் மீண்டும் மதுவைப் பருகினான். தான் பார்த்து வந்த தெருக்களின் மாமிச வாடையை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்து சுவாசப்பையை நிறைத்தான். அதன் மணத்தில் திளைத்தவாறே உறங்கினான்.
நூலகத்தின் வரைபடம்-2
கிளைக்குறிப்பு
தொலைவில் சடைத்த மரங்களிடையே வெண்கோபுரமாய்த் தெரிகிறதே அதுதான் நூலகம். படியேறி உட்சுவர்களைப் பார்க்கிறவர்கள் உணர முடிவதெல்லாம் இது ஒரு காலத்தில் நூலகமாய் இருந்தது என்பதைத்தான். சுவர் முழுவதும் ஆபாசக் குறிப்புகளும் படங்களும் வரையப்பட்டிருக்கின்றன. வரைபவர்கள் கரிகளால் வரைந்திருக்கிறார்கள். கரி பிரண்ட கைகளால் அவற்றைத் தழுவியுமிருக்கிறார்கள்.
00
அவன் புத்தகத்தை வாசித்தபடியேயிருந்தான். தாள்களின் கனம் வற்றிக் கொண்டேயிருந்தது. ஆனால் கதையோ எல்லையற்று விரிந்தபடியிருந்தது. அவன் சலிப்படையவில்லை. வாசிப்பின் வெளி விரிய கடலளவு கதைகளுக்குள் இறங்கி மூச்சுத் திணறியவாறிருந்தான்.
வாசிப்பு-2சாகாவரங்களால் புனையப்பட்டவனின் புரவிகள் கால் மடங்கின. ஆரணியம் எரிந்து கொண்டிருந்தபோது சாகசங்கள் மட்டுமே புகையாய் எழுந்து வானத்தை மூடின. சனங்கள் தண்ணீருக்காக அலைந்துகொண்டிருந்தனர். தானியக்களஞ்சியங்களை வெம்மை தின்று கொண்டிருந்தது.ஒவ்வொரு இரவுகளையும் ஓராயிரம் யுகங்களால் சனங்கள் தாண்டினார்கள். பசித்த வயிறுகளை வானம் நோக்கிக் குவித்திருந்தவர்களின் வாய்களில் தணல் மழை பொழியத் தொடங்கியது. சனங்கள் பெயர்ந்து கொண்டேயிருந்தார்கள். கூடாரங்களைக் காவியவாறே சொற்ப நாட்களில் கணக்கிட முடியாத் தூரங்களைக் கடந்தார்கள். ஆறுகள் வற்றின குளங்கள் பொருக்குலர்ந்தன.
குறுக்கீடு
(குரல்வளையில் கத்தி வைக்கப்பட்ட இருவர் தெருமுனையில் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்)
அருவம்- நகரத்தைப் பார்த்தாயா?
உருவம்- சிரிப்பால் சிதறிக்கிடக்கிறது. சனங்களின்
மகிழ்ச்சியில் கட்டிடங்கள்
கோபுரங்களாய் எழுகின்றன.
காற்று கீதங்களால் மிதக்கிறது.
அருவம்- அதிருக்கட்டும், சனங்களை நன்றாக
உற்றுப்பார். அவர்களின் இடுப்பில் மர்மக்
கயிறு கட்டப்பட்டிருக்கிறது
தெரியவில்லையா? அவர்களின்
தூரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
எல்லாக் கயிறுகளின் மைய
முடிச்சுக்களையும் வைத்திருப்பவனின்
வர்ணம் பூசப்பட்ட முகத்தினுள்
உள்ளெரியும் கனலை நீ இன்னும்
உணரவில்லையா?
உருவம்- நீ ஏன் அர்த்தமற்றுக் குழம்புகிறாய்.
கயிற்றையும் அதன் மையத்தை
வைத்திருப்பவனின் முகத்தையும் ஏன்
பார்க்கின்றாய். இந்த நகரத்தின்
மினுமினுப்பைப் பார். சனங்களின்
புன்னகையைப் பார். சனங்கள்
முன்னிலும் அழகாயிருக்கின்றார்கள்.
வீதிகள் அழகாயிருக்கின்றன. எங்கும்
வாகனங்களின் இரைச்சல். எப்படி
மாறுகிறது நகரம்.
அருவம்- நீ கடந்த காலத்தின் கண்ணீரை
மறந்துவிட்டாய். மரணங்களை
மறந்துவிட்டாய். வர்ணமடிக்கப்பட்;ட
புன்னகைகளுக்குள் மூழ்கிக்கிடக்
கின்றாய். இந்த நகரத்தின் சுவர்களில்
எண்ணற்ற சாவுகளின் சித்திரவதை
களின் துயரம் படிந்திருக்கிறது.
00
அவன் அவர்களின் உரையாடலையே அவதானித்தபடியிருந்தான். எது பொய்? எது மெய்? பொய்க்கும் மெய்க்குமிடையில் சில நிமிடங்கள் அல்லாடினான். திடீரென வீசிய காற்று, அவன் கைளிலிருந்த புத்தகத்தின் ஒருதாளை தவறுதலாகவோ வேண்டுமென்றோ இழுத்துக் கொண்டு சென்றது.
காற்று வாசித்த கதை
அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் மிரட்சி படர்ந்த கண்களில் ஒரு ஆட்டுக்குட்டி அலைந்துகொண்டிருந்தது. மேய்ப்பனின் தடி தொலைந்துவிட்டது. அவனால் மந்தைகளைக் அடக்கமுடியவில்லை. பச்சை நிலங்கள் எரிந்து போகப்போக மணல்வெளிகளை மேயும்படி கூறிக்கொண்டேயிருந்தான். மந்தைகள் திமிறின. புற்களைத் தேடத் தொடங்கின. மேய்ப்பன் சூழ்ச்சிகளும் சூனியங்களும் புரிந்தான். பொறிகளை வைத்தான். முடியவில்லை. கொலைகளால் அச்சுறுத்தவும் செய்தான். மந்தைகள் திமிறிக்கொண்டேயிருந்தன. இரவுகளில் அவை நழுவத்தொடங்கின.
மறுவாசிப்பு-2
அச்சுறுத்தப்பட்ட பொழுதுகளை குதிரைவீரன் உருவாக்குகிறான். எல்லா முற்றங்களிலும் கள்ளிகள் முளையிடுகின்றன. நிராதரவான சனங்களின் பிணங்களால் இடங்கள் யாவும் நிரம்பியிருக்கின்றன. பிணங்களை எண்ணுவோர் சலித்துப் போயினர். ஊடகங்கள் பலவும் சாவையொட்டியிருந்தன. இறந்தவர்களில் பலர் திரும்பிவரவேயில்லை. சிலரின் வருகை அபூர்வமாய் நிகழ்ந்தது. சனங்கள் பிணங்களைக் கைவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். அவர்களின் முகங்களில் சாவு காலத்தின் களை மிகுந்திருந்தது.
கதைசொல்லியின் மனப்பதிவு
நான் என் தலையில் குளவிக் கூட்டைக் காவித்திரிகின்றேன். எனது நாட்கள் யுத்தத்தின் கால்களினாலையே நடந்தன. மிகப் பெரிய அழிவுகாலத்திலிருந்து மீண்டு வந்த மனிதர்கள் சாபத்தின் மொழியிலேயே உரையாடுகின்றனர். சபிக்கப்படுபவர்களின் தந்திரங்களும், சனங்;களை அரண்களாய் மாற்றும் போதெல்லாம் தாங்கள் யுத்தத்தை மூக்கின் மிக அருகில் முகர்ந்ததாய் அவர்கள் சொன்னார்கள். தங்களின் ஒவ்வொரு தப்பித்தல் முயற்சிகளிலும், அவர்கள் தீயைப் பரவவிட்டதாகச் சொன்னார்கள். தப்பித்து வந்தவர்களில் சிலரும் சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் பலரும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நகரத்திலிருந்து இந்தக் கதை எழுதப்படுகின்றது.
வாசிப்பு-3
அரசன், சரித்திரம் தன்னை அதிவீரனாகப் புனையப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருந்தான். தன்னை வானளவு விஸ்பரூபம் கொள்ளவைக்கும் கனவுகளில் மெய்மறந்தான். எத்தனையெத்தனை மன்னர்கள், எத்தனையெத்தனை வெற்றிகள், எத்தனையெத்தனை தோல்விகள். தான் வெல்ல மட்டுமே பிறந்தவன் எனப்பெருமிதம் கொண்டான். எதற்கும் யாருக்கும் எப்பொழுதும் அஞ்சாதவன் தானெனப் பறைசாற்றினான்.
மறுவாசிப்பு-3
பாவம் மக்கள். வெற்றிக்கும் தோல்விக்குமிடையில் கிழிபட்டுக்கொண்டிருந்தார்கள். பசி பெரும் தீச்சுவாலையாய் வளைந்து வளைந்து எரிந்தது. உடமைகளை இழந்தனர் உயிர்களை இழந்தனர். நம்பியவர்களாலும் நம்பாதவர்களாலும் கொல்லப்பட்டனர். அவர்களின் விருப்பங்களை, தப்பித்தல் முயற்சிகளை மூடி மூடி போர் வளர்ந்துகொண்டேயிருந்தது. கொட்டித் தீர்க்க முடியாத வேதனைகளோடும் இட்டு நிரப்ப முடியாத மரணங்களோடும் அலைந்தபடியிருந்தனர்.
நூலகத்தின் வரைபடம்-3
இரண்டு அடுக்குகளைக் கொண்ட கட்டிடத்தைக் கொண்டது. படிகள் உட்புறமாய் வளைந்து வளைந்து மேலேறுகின்றன. உள்ளே எப்போதும் அமைதியே நிலவுகின்றது. படிப்பவர்களின் கூர்ந்த அக்கறை புத்தகத்தின் உள்ளே அல்லது வெளியே இருக்கும் போதும் அவர்கள் உதடுகளைப் பிரிப்பதில்லை. அறைகளின் பிரமாண்டம் எல்லோர் வாய்களிலும் பூட்டுக்களை மாட்டியிருக்கின்றது. படியேறுவோரும் இறங்குவோரும் நிதானம் தப்பிய கணங்களில் வெளவால்கள் சடசடத்தபடி சுவர்களில் மோதி ஒலியெழுப்பும். மற்றப்படி அவை யாருக்கும் இடையூறு செய்வதில்லை.
00
அவனின் வாசிப்பு தொடர்ந்தது. பொழுதை நிசப்தம் உறிஞ்ச உறிஞ்ச அவன் புத்தகத்தின் எல்லைகளை மேவிமேவிப் பயணித்தபடியிருந்தான். கண்ணுக்கும் மூளைக்குமிடையில் சூரியன் சரிந்துகொண்டிருந்தது. நூலகத்தினுள் இரையும் காற்று அவன் செவிகளை ஊடறுக்கவில்லை. அறைக் கதவுகளை உடைத்தெறியும் வேலை காற்றிற்கும் இருக்கவில்லை. ஏற்கனவே அவை உடைந்துதானிருந்தன.
வாசிப்பு-4
தலை துண்டிக்கப்பட்ட காலம் குதிரை வீரனுடையதாக இருந்தது. காவியங்கள் அவனுக்கானதாக இருந்தன. பதிகங்களாலும் பாடல்களாலும் பக்தர்களாலும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தான். சனங்கள் பற்றிய குறிப்புகள் வரலாற்றுச் சுவடிகளிலிருந்து கிழித்தெறியப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் யாவரையும் வீரன் தனக்குரியதாக்கினான். இரவுகளும் பகல்களும் அவனிடமேயிருந்தன. யுத்தத்தின் சாகசங்களால் தன் காலத்தை நிறைத்திருந்தான். உச்சமாய்ப் புனையப்பட்ட கோடான கோடிக் கதைகளுக்கும் சொந்தக்காரனாக இருந்தான்.
மறுவாசிப்பு-4
அரசனின் மாளிகையில் மந்திரிகள் கூடியிருந்தனர். நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்ட போதெல்லாம் மந்திரியின் குரல் போதையின் மணமாய் ஓலித்தது. சேனாதிபதி நெஞ்சை நிமிர்த்தியவாறே நின்றான். அரசனின் சிம்மாசனத்தின் பின்னால் இலைகள் உதிர்ந்த ஒரு மரம் வளர்ந்திருந்தது. தன் வம்ச வரலாறுகளின் நாயகர்களை நினைத்துக் கொண்டான். யாராலும் உதைத்து விழுத்த முடியாத சிம்மாசனம் தன்னுடையதென பெருமிதம் கொண்டான்.
சனங்கள் தம் தலையில் தாமே அடித்துக் கொண்டார்கள். எதற்கானது இந்தப் போர்? யாருக்கானது இந்தப்போர்? எத்தனையெத்தனை குருத்துக்கள் கருகிப்போயின. வெற்றிகளால் புனையப்படும் காலத்தின் உண்மை முகம் மிகக் கொடூரமாக இருந்தது. உயிர்களைத் தின்னும் இரண்டு துருவங்களுக்கிடையில் பரிதாபகரமான எண்ணற்ற மனிதர்கள் சுருண்டுகிடந்தார்கள்.
வாசிப்பு-5
பிணங்களைக் கணக்கிடுபவர்கள் சோர்ந்து போயினர். வாழிடம் குறுகக்குறுக எல்லா இடங்களுமே மயானங்களாகத்தானிருந்தன. அடையாளங்காணப்படாத சடலங்கள் ஏராளமாயிருந்தன. இறந்தவர்கள் இறந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டனர். சலிப்படைந்த கணக்கிடுவோர் பிணங்களைக் கைவிட்டு ஓடினர். அவர்களை பிணங்கள் துரத்திக்கொண்டிருந்தன. பாலகப் பருவம் மாறாத பிணங்களின் கைகளில் செயலிழந்துபோன துப்பாக்கிகளிருந்தன.
00
அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. பாழடைந்த கட்டடத்தின் சுவர்களில் மோதித்திரிந்தன இரண்டு வெளவால்கள். அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். கண்கள் களைத்துப் போயின. சற்று எழுந்து காலாற நடக்கலாமென எழுந்தான். பாசி படர்ந்த சுவரின் வெடிப்புகளிலிருந்து வெளிப்பட்ட ஓவியங்களை உற்றுப்பார்த்தபடி நின்றான். மிகவும் கொடூரமான ஓவியங்கள் அவனின் கண்களில் மின்னி மறைந்தன. இரத்தமும் சதைச் சிதறல்களும் ஓவியம் முழுவதிலும் சிதறிக்கிடந்தன. படிக்கட்டின் அரைவாசித்தூரம் வரை இறங்கியவனின் கண்களில் சூரியன் ஒளிமங்கிச் செல்வது தெரிந்தது. அவசரமாகப் படியேறி மீண்டும் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினான்.
மறுவாசிப்பு-5
கனவு நகரம் கட்டடங்களை இழந்தவாறிருந்தது. இரத்தம் உறிஞ்சுங் காலம், அழகான புன்னகையைச் சூடியிருந்த நகரத்தில் இப்போது துயர் படிந்த முகத்துடன் காற்று தேசாந்திரியாகத் திரிந்தது. எத்தனை பேச்சுவார்த்தைகள, பிரகடனங்கள், சந்;திப்புக்கள், வாதங்கள், மனமுறிவுகள், காட்டிக்கொடுப்புக்கள், மரணதண்டனைகள் யாவற்றையும் மௌனமாகப் பார்த்திருந்த நகரம் கைவிடப்பட்ட குழந்தையைப் போல அழுது ஓய்ந்திருந்தது. விளக்குகள் அணைந்துபோயின. யாவரும் விட்டுப்போயினர். பாடல் பெற்ற பெருந்தலம் ஒப்பாரியில் சுருண்டுபோனது.
நூலகத்தின் வரைபடம் -4
எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது தொன்மத்தின் சிதைவு. நூலகம் சிதைவடையத் தொடங்கிய காலத்தை நினைவுகூர வேண்டியிருக்கிறது. மகாஞானிகள் இங்கிருந்துதான் பிறப்பெடுத்தார்கள். வன்முறையாளர்களும் இங்குதான் பிறப்பெடுத்தார்கள். வித்தியாசம் என்னவென்றால் கடைசியில் மகாஞானிகள் வெருண்டோடினார்கள், விரட்டப்பட்டார்கள், தோற்கடிக்கப்பட்டார்கள். வன்முறையாளர்களோ புத்தகங்களில் மரணத்தின் முகத்தை வரைந்தார்கள். யாருமே நெருங்க முடியாதபடி வாயிலைப் பூட்டினார்கள். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. பூட்டுக்களில் துருவேறி நைந்து விழுந்தது. எனினும் சனங்களுக்கு அன்னியமாயிற்று நூலகம். ரகசியத் திருடர்களாய் சிலர் இங்கு வருகிறார்கள் உடைந்துகிடக்கும் கட்டடத்திற்காகவும் சிதிலமாகிப் போன புத்தகங்களுக்காக வும் அழுகிறார்கள். மகாஞானிகளுக்கு மறுக்கப்பட்ட வழிகளில் வன்மம் படர்ந்த விழிகளுடன் வன்முறையாளர் கள் காத்திருக்கின்றனர். பொறியாயிற்றுக் காலம்.
வாசிப்பு-6
குதிரை வீரன் தன் காலத்தின் இறுதிப் போரை நிகழ்த்தினான். குதிரைகளுக்கு நம்பிக்கையூட்டினான். சனங்களோ எதையும் நம்பவில்லை. ஒரு புனைவுக்காலம் தம்முன் சருகாகி உதிர்வதை அவர்கள் பார்த்திருந்தனர். மிரண்ட விழிகளுடன் வார்த்தைகளைக் காலடிகளுக்குள் புதைத்த சனங்கள் மீளமுடியாத துயரில் மூழ்கிப்போயினர். வேறுமார்க்கங்கள் இல்லாத போது குதிரைவீரன் சனங்களை அரண்களாக்கினான். குழந்தைகள் வீரிட வீரிட யுத்தத்ததை நிகழ்த்தினான். நாக்குப் பிடுங்கப்பட்ட சனங்கள் கொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். எங்கும் மரண ஓலம். காவியங்களால் விதந்துரைக்கப்பட்ட வீரன் ஒளிந்து திரிந்தான். வீரதீரப் பாடல்கள் நாறிமணத்தன. காடுகள் கைவிட்டன. கடல் கைவிட்டது. வானம் கைவிட்டது. கடைசியில் நம்பிக்கைகளும் கைவிட்டன.
மறுவாசிப்பு-6
அரசன் கருணை வடிவமான தன் கடவுளிடம் மண்டியிட்டிருந்தான்.அவனின் கைகளில் வெண்ணிற மலர்கள் மலர்ந்திருந்தன. இரத்தக் கறை படிந்த கைகளால் அவற்றைப் பற்றியிருந்தான். காவியுடை தரித்த மதகுரு அவனை ஆசிர்வதித்தார். வெல்லப்படாதிருந்த யுத்தத்தை வெல்லப் போகும் வீரன் நீ என்றார். அரசனின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அவன் ஏதும் பேசவில்லை. ஒருகணம் கடவுளை ஏறெடுத்துப் பார்த்தான். அவரின் முகத்தில் ஏளனச் சிரிப்புப் படர்வதையுணர்ந்தான். மறுகணம் அவரின் கண்களில் கண்ணீர் பெருகுவதைக்கண்டான். அரசன் கவலை கொள்ளவில்லை இரத்தம்; படிந்த கைகளால் அவருக்கு வெண்ணிற மலர்களைச் சாத்தினான். மதகுரு கண் அசைவினால் அரசனைத்தேற்றினான். அது அவர் கடவுளைத் தான் சமாளித்துவிடுவதாய்க் கூறுவதுபோலிருந்தது அரசனுக்கு.
அரசன் கடவுளின் கால்களைப் பற்றியவாறு புலம்பினான் “இந்தப் போரில் நான் வென்றுவிட வேண்டும். நான் சரித்திரத்தின் தொடக்கமாயிருக்க விரும்புகின்றேன். கடவுளே எனக்கு உன் கருணையைப் போதிக்காதீர். கொல்லப்படும் சனங்கள் குறித்துக் கவலை கொள்ளாதீர். யுத்தத்தில் சனங்கள் கொல்லப்படுவது ஒன்றும் புதுமையில்லை. நான் நிகழ்த்துவது மனிதாபிமான யுத்தம் சந்தேகம் கொள்ளாதீர் இது மனிதாபிமான யுத்தந்தான். எனது வீரர்கள் புனிதர்கள் அவர்கள் குறிகளை அறுத்தெறிந்து விட்டார்கள். சித்திரவதைகளை மறந்துவிட்டார்கள். அவர்கள் எதிரியைக் கொல்ல ஆசிர்வதியும்”
கடவுள் தனக்குள் சிரித்துக்கொண்டார். அவரின் காதுகளுக்குள் ஓலங்கள் கேட்டவாறேயிருந்தன. யுத்தத்தை விரும்பாத தன்னிடமே யுத்தத்திற்காக ஆசிர்வதிக்குமாறு கேட்கும் அரசனை அவரால் என்ன செய்யமுடியும். கருணை என்பதும் இரக்கம் என்பதும் காலாவதியாகிப்போன ஆயுதங்களாகிவிட்டன என சலித்துக்கொண்டார். அவரின் முகம் வெளிறி உறைந்துபோயிருந்தது. அரசனின் வேண்டுதல்களால் நிறைந்திருந்த அவரது செவிகளிலிருந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது.
கதை சொல்லியின் மனப்பதிவு
அரசன் இன்றைய தன் புகைப்படங்களில் குழந்தைப் புன்னகையைப் பொருத்தியிருக்கின்றான். அச்சுறுத்தப்பட்டிருக்கும் நகரங்களின் மூலை முடுக்குகள் எங்கும் பொருத்தப்பட்டிருக்கும் உயர்ந்த வர்ணப் புகைப்படங்களில் அவன் சிரித்தபடியிருக்கின்றான். அவற்றில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இனச்சுத்திகரிப்பின் வார்த்தைகள். நாக்கு அறுக்கப்பட்ட சனங்களை அவன் ஆசீர்வதிக்கின்றான். வற்றாத கண்ணீரையும் வலியையும் வழங்கியவனின் புன்னகை ஒட்டப்பட்டிருக்கும் நகரத்தின் கட்டடப் புதருக்குள் புதைந்துகிடக்கிறது சூரியன்.
வாசிப்பு-7
சுற்றி வளைக்கப்பட்ட பெருமணல் வெளியில் இறுதியுத்தம் நடந்தது. சனங்களை விழுங்கக் காத்திருந்த அரசனின் படைகளிடம் சனங்கள் மண்டியிட்டனர். குதிரைவீரன் தன் வீரர்களாலும் கைவிடப்பட்டான். கடைசியில் ஓளிவட்டக்கனவுகள் சிதையவும் சாகாவரப் புனைவுகளும் சாகசங்களும் அதியற்புதக் கதைகளும் நொருங்கியுடையவும் குதிரைவீரன் தன் கழுத்தைத் தானே …………………
மறுவாசிப்பு -7
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
00
அவன் கைகளிலிருந்த புத்தகத்தின் தாள்கள் உதிர்ந்தன. அவற்றை காற்று எற்றியெற்றியடித்தது. பாழடைந்த நூலகமெங்கும் சிதிலமான காலத்தின் கடதாசித்துண்டுகள் பறந்தபடியிருந்தன. மனதுக்குள் ஏதோ அறுபட்ட உணர்வாய் அவனுக்கிருந்தது. பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டான். மாயங்களாலும் வலிகளாலும் ஆயுதங்களாலும் துயரங்களாலும் வார்க்கப்பட்ட காலம். தியாகங்களாலும் அர்ப்பணிப்புக்களாலும் போர்த்தப்பட்ட காலம், துரோகங்களாலும் சதிகளாலும் பின்னப்பட்ட காலம் கண்ணாடிக் குவளையாய் நொருங்கிக் கிடந்தது. பிள்ளைகளைத் தேசத்தின் பெயரால் ஈர்ந்தவர்களின் கருப்பைகளில் கவிந்திருக்கும் இருள் விலக்கமுடியாதபடி பரவி வருவதையுணர்ந்தான். எல்லாமே பூச்சியத்தில் முடிந்துபோய்விட்டது. கைகளை வான்நோக்கி விரித்தபடி சில நிமிடங்கள் மௌனித்திருந்தவன் படியிறங்கத் தொடங்கினான். தெருமுனையில் அந்த இருவரும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
குறுக்கீடு
அருவம்- குரல்வளை அறுக்கப்பட்டவர்களின் வலியை நீ உணர்கிறாயா?
உருவம் - யாருடைய குரல்வளை அறுக்கப்பட்டிருக்கிறது?
அருவம்- உன்னுடையதும் என்னுடையதும் எல்லோருடையதுந்தான்.
உருவம்- நீ என்ன பிதற்றுகிறாய். சனங்களின் முகம் முன்னரிலும் ஒளிர்கிறது.
அவர்களின் எல்லைகள் விரிந்துவிட்டன.
கனவுகளில் படபடக்கிறார்கள். நீ ஏன்
குழம்பித் தொலைகிறாய்.
அருவம்- புலப்படாத அழுகையும் தீர்க்கப்படாத
துயரமும் ஒரு உறைவாளைப்போல்
அவர்களிடம் உறைந்திருக்கிறது.
பறிகொடுத்தவனுக்குத்தான் இழப்பின்
வலி புரியும். நீ கனவுகளில்
வசிக்கின்றாய். நிஜத்தின் முகம்
கொடூரமானது. கைவிடப்பட்டவர்களின்
வயிறுகளில் இன்னும் பற்றியெரிந்து
கொண்டிருக்கிறது நெருப்பு.
00
அவன் அவர்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தான். சிதறிய சில கடதாசித் துண்டுகள் காற்றில் அலைக்கழிக்கப்பட்டவாறிருந்தன. இன்னும் வாசிக்கப்படாத ஏராளம் கதைகள் அவற்றில் அச்சிடப்பட்டிருக்கின்றன.
நன்றி- எதுவரை? இதழ் 3 பெப்ரவரி – மார்ச் 2010